அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்
டெல்லி, மார்ச் 21–
டெல்லி அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பாஜக அரசு ஒப்புதல் தராததால், இன்று தாக்கல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் பா.ஜ.க., வட மாநிலங்களில் உள்ள பா.ஜ.க அல்லாத ஆளும் கட்சிகளை கவிழ்க்கவும் சதி திட்டம் தீட்டிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட ஆளும் கட்சியான சிவசேனா ஆட்சியை கவிழ்த்தது. அது மட்டுமல்லாது தலைநகர் டெல்லியிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கலைக்க முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது.
அதன்படி சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
பட்ஜெட் நிறுத்திவைப்பு
இந்நிலையில் டெல்லி பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க மறுத்ததை அடுத்து வரலாற்றில் முதன்முறையாக பட்ஜெட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசின் நிதிநிலைஅறிக்கை ஒவ்வொரு முறையும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகே தாக்கல் செய்யப்படும். அதன்படி டெல்லி பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க மறுத்து திருப்பி அனுப்பியது.
பட்ஜெட் குறித்து சில கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ள உள்துறை அமைச்சகம், உரிய விளக்கம் அளிக்கும் வரை பட்ஜெட் தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு மாநில அரசின் பட்ஜெட்டை நிறுத்தி வைப்பது இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத செயல் என்றும் ஒன்றிய அரசு அத்துமீறி செயல்படுவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.