செய்திகள்

டெல்லியில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : சாலைகள் வெறிச்சோடின

புதுடெல்லி, ஏப்.20–

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் 26–ந்தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கெனவே டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது. முகக்கவசம் இல்லாமல் வெளியே சென்றால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணி முதல் வரும் 26–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள், உணவு, மருத்துவ சேவைகள் தொடர்ந்து இயங்கும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. ஆனால் திருமண பத்திரிகையையோ அல்லது அதன் மின்னணு வடிவத்தையோ காட்ட வேண்டும். இறுதி ஊர்வலத்தில் 20 பேர் பங்கேற்கலாம். கொரோனா பரிசோதனைக்கும், தடுப்பூசி போடவும் செல்பவர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம். விமான நிலையம், ரெயில் நிலையங்களுக்கு செல்பவர்களும் டிக்கெட்டை காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முழு ஊரடங்கு தொடங்கியுள்ளதால் டெல்லியில் சாலைகள் வெறிசோடி காணப்பட்டன. வாகனப் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் பொது பூங்காக்கள். உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *