போஸ்டர் செய்தி

டெங்கு, பன்றி காய்ச்சலை குணப்படுத்த ரூ.90 கோடி மருந்துகள் கையிருப்பு

சென்னை, நவ.9–

டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்க 90 கோடி ரூபாய் மதிப்பில் 3 மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஒரு நிமிடத்திற்குள் ரத்த அணுக்கள் எண்ணிக்கையை கண்டறியும் கருவிகள் 1100 அரசு மருத்துவமனையில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கொசு ஒழிப்பு பணிக்கு 20 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்திலுள்ள தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் தமிழகத்தில் தொற்றால் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்கள் குறிப்பாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் வந்தால் அவைகளை தடுப்பதும், கட்டுப்படுத்தி ஒழிப்பதும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிக்சை அளிப்பதும் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:–

டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் இதர பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவும், பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொது இடங்களில் லைசால் மூலமாக சுத்தம் செய்யவும், கை கழுவும் பழக்கத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர்களால் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அறியப் பெற்றவுடன், அரசு மருத்துவ நிலையங்களை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துக்கடைகளில் பொதுமக்களுக்கு உரிய பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநரகம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1200 முகாம்கள்

காய்ச்சல் கட்டுப்படுத்த 1200 காய்ச்சல் முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. 416 நடமாடும் மருத்துவமனை குழுக்கள் மற்றும் 770 ஜீப் வாகனங்களின் மூலம் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்ந்த களப்பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் மருத்துவர்களுக்கு, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து பேராசிரியர் மற்றும் பொது சுகாதாரத் துறை வல்லுநர்களும் ஒருங்கிணைந்து, மாவட்டந்தோறும் காய்ச்சல் குறித்த நோய்களுக்கான சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பொது இடங்களில் கொசுக்களைக் குறைத்து, அதன் மூலம் பரவும் காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடுகளில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்வது, குடிநீரைக் காய்ச்சி பருகுதல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் நுழையாவண்ணம் மூடி வைத்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தொடர் நடவடிக்கைகள்

தினசரி மாவட்டங்களிலிருந்து பெறப்படும் காய்ச்சல் நிலவரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றம் தொடர்புடைய பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் சேர்ந்து கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது கட்டடங்கள், அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பகுதிகளை பார்வையிட்டு, கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

20 தற்காலிக பணியாளர்கள்

கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டாரத்திற்கு 10 தற்காலிக பணியாளர்களும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வட்டாரத்திற்கு 20 தற்காலிக பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 10 தற்காலிக பணியாளர்களும் நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் 250–300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதமும் மொத்தம் 20,000 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான துரித செயல்பாட்டுக் குழு இயங்கி வருகிறது. எந்தப் பகுதியிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்தப் பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

ஒரு நிமிடத்தில் தெரியும்

‘‘எலிசா” முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 131-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவிளான பரிசோதனை மையங்கள் உள்ளன. ஒரு நிமிடத்திற்குள்ளாக ரத்த அணுக்கள் எண்ணிக்கையைக் கண்டறியும் செல் கவுன்ட்டர் கருவி 1100 அரசு மருத்துவ நிலையங்களில் உள்ளது.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள், ரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, ரத்தக் கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் 90 கோடி ரூபாய் மதிப்பில் 3 மாதங்களுக்குப் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான 6,391 உட்புற புகை அடிப்பான்களும், 4,933 வெளிப்புற புகை அடிப்பான்களும், 310 வாகனங்களில் எடுத்துச் செல்லத்தக்க புகை அடிப்பான்கள் என மொத்தம் 11,634 புகை அடிப்பான்கள் இப்பணியில் பயன்படுத்தப்படுகிறது.

இவை தவிர அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தேவையான கூடுதல் கருவிகளை பயன்படுத்தி வருகிறது. சுகாதாரத் துறையின் கையிருப்பில் உள்ள கொசு மற்றும் அவற்றின் “லார்வா” மற்றும் முட்டைகளை அழிக்கவல்ல “பைரத்திரம்” பூச்சிக்கொல்லி 91,540 லிட்டரும், “டெமிபாஸ்” பூச்சிக்கொல்லி 75,834 லிட்டரும் டெக்னிக்கல் மேலத்தியான்” 37,814 லிட்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பன்றி காய்ச்சலுக்கு கபசுர குடிநீர்

இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு, இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் குறும்படம் மற்றும் விளம்பரங்கள் வெளியீடு மூலம் கொசு உற்பத்தியை தடுப்பதற்கான மக்களின் பங்கு குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அரசால் வழங்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சல்களை தடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு ஒசில்டாமிவீர் (டாமி புளூ) என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்நோயை எளிதாக குணப்படுத்தலாம். அரசு மருத்துவ நிலையங்களில் 19.75 லட்சம் ஒசில்டாமிவீர் (டாமி புளூ) மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக, கிங் மருத்துவ நிலையம் உட்பட 8 ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இது தவிர 16 தனியார் ஆய்வு மையங்களுக்கும் இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனி வார்டுகள்

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, தனியாக சிறப்பு தனி வார்டுகள் அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளவேண்டும்.

அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க பொது மக்கள் கூடுமிடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இதர மாநிலங்களுக்கு சென்று வந்தால் கை கழுவும் பழக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாநகர மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பாதுகாப்பிற்குத் தேவையான தடுப்பூசிகள், 10,000 சுய பாதுகாப்பு உடைகள், 33,635, என்.95 முக கவசங்கள் மற்றும் 3.15 லட்சம் மூன்றடுக்கு முகக் கவசங்கள் கையிருப்பில் உள்ளது.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

செய்தித் தாள்களில் வரும் செய்திகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள், தினந்தோறும் 24 மணி நேர அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, தக்க நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்தில் செயல்படுகிறது. அதன் தொலைபேசி எண்கள் 044-24350496, 044-24334811 மற்றும் கைபேசி எண் 94443 40496, 87544 48477.

காய்ச்சல் இறப்பு இருக்க கூடாது

அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் டெங்கு, பன்றிக் காய்ச்சல் உட்பட அனைத்து வகையான காய்ச்சல்களும் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளன. இருப்பினும், இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் முடுக்கிவிட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி தேவையான மருத்துவ சிகிச்சைகள் உடனுக்குடன் வழங்கப்படவேண்டும், காய்ச்சலால் இறப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில அளவிலான உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகள் செவ்வனே நடைபெற மாவட்ட அலுவலர்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பி. அமுதா, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மேலான்மை இயக்குநர் டாக்டர் ப. உமாநாத், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் (பொறுப்பு) ராஜாராமன், திட்ட இயக்குநர் தமிழ்நாடு சுகாதார திட்டம் உமாமகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ருக்மணி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *