செய்திகள்

‘டிக்டாக்’ மோகம்: பூனையை தூக்கில் தொங்கவிட்ட வாலிபர்

Spread the love
‘டிக்டாக்’ மோகம்:
பூனையை தூக்கில் தொங்கவிட்ட வாலிபர்
மிருகவதை சட்டத்தில் கைது

திருநெல்வேலி, மே 23

‘டிக்டாக்’ மோகத்தில் அதிக அளவில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக தான் செல்லமாக வளர்த்த பூனையை தூக்கில் தொங்க விட்ட நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் மோகத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆடல், பாடல், நடிப்பு என பல்சுவைகளை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் அரங்கேறுகின்றன.

லைக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ பெண்களின் வாழ்வு நாசமாகிவிட்டது. கொலைகளும் நடந்துள்ளன. குடும்பங்களும் பிரிந்துள்ளன.

தற்போது ஒரு இளைஞர் செய்த காரியம் அதிர்ச்சியை தருகிறது. நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த செட்டிகுளத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது அப்பா மாட்டு பண்ணை வைத்துள்ளார். அவருக்கு உதவியாக தங்கராஜ் இருந்து வருகிறார். எந்நேரமும் மாடுகளுடன் இருப்பதால், அதனுடன் சேர்ந்து நிறைய டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார்.

பண்ணை வைத்திருப்பதால் மாடுகளுடன் விதவிதமாக வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார். ஆனால் பெரிய அளவில் அந்த வீடியோக்களுக்கு லைக்குகள் விழவில்லை.

இதையடுத்து, நிறைய வடிவேலு காமெடிகளை செய்து பார்த்து டிக்டாக் பதிவிட்டார். அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை போல தெரிகிறது. பீச்சுக்கு போய் படகு மேல் நின்று பலவாறாக வீடியோ எடுத்து போட்டார். அதையும் யாரும் மதிக்கவில்லை. அப்போதுதான் தங்கராஜ் பார்வை தான் செல்லமாக வளர்த்த பூனை மீது சென்றது. இவர்தான் இந்த பூனையை ரொம்ப நாட்களாக வளர்த்து வந்துள்ளார். இந்த பூனையை உயிரோடு தூக்கில் தொங்க விட்டு, அதனை டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டதும், ஏகப்பட்ட லைக்குகள் வந்து விழுந்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதை யடுத்து, உடனடியாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் தங்கராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *