சிறுகதை

டாக்டர் | ஆவடி ரமேஷ்குமார்

” அப்பாவுக்கும் மகளுக்கும் என்ன பிரச்சினை? உங்க சத்தம் வாசல் வரைக்கும் கேட்குது” என்று கேட்டுக்கொண்டே நண்பன் மோகனின் வீட்டுக்குள் நுழைந்தார் டைரக்டர் மதிச்செல்வன்.

” வா மதி! நீயே சொல்லு… உன் பெரிய மகனை நீ நடிகனாக்கினே… சின்ன மகனை டைரக்டர் ஆக்கினே… அப்படினா நான் என் மகளை என்னவாக்குவேன்?”

” ஓ… +2 ரிசல்ட் வந்திடுச்சில்ல..

அதான் உங்களுக்குள் சண்டையா… என்னம்மா சொல்றான் . உங்கப்பன்… உன்னையும் டாக்டருக்கு படிக்கச்சொல்றானா?” என்று சாந்தியை பார்த்து கேட்டார் மதி.

” ஆமா அங்கிள். மார்க் நிறைய வாங்கிட்டேங்கிறதால டாக்டர் மகள் டாக்டர்தான் ஆகனுமா… எனக்கு டாக்டர் தொழில் பிடிக்கலை. அதெல்லாம் அப்பாவோடயே போகட்டும். ஏன் நான் டி.வி.காம்பியரிங் பண்ணக்கூடாதா? கேளுங்க அங்கிள்”

” அட.. இது நல்ல கேள்வி!” என்று சிரித்தார் மதி.

” என்ன மோகா டி.வியில் காம்பியரிங் பண்றது, அது சம்பந்தமா படிக்கிறது… நல்லது தானே.. அப்படியே சீரியல்களிலும் நடிச்சுக்கலாம். விட்றேப்பா சாந்தியை..”

” என்ன மதி நீ! உன் டைரக்டர் புத்தியை காட்டிட்டியே… முதல்ல நீ என்ன விஷயமா இந்த வீட்டுக்கு வந்த? அதச் சொல்லிட்டு முதல்ல கிளம்பு. என் குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடுவ போல இருக்கே” என்ற மோகன், மதிச்செல்வன் அமர்ந்திருந்த சோபாவிற்கு நேர் எதிரிலிருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்திருந்தார்.

தோள்களை குலுக்கியபடி வந்த விஷயத்தை மிகுந்த நேர்த்தியாக, தெளிவாக ,பத்து படங்களை இயக்கிய அனுபவத்துடன் சொல்ல ஆரம்பித்தார் மதிச்செல்வன்.

மோகனும் சாந்தியும் அவர் பேச்சை கேட்டு பிரம்மித்தார்கள். உற்சாகமானார்கள்.

மதி சொல்லச் சொல்ல தலையைத் தலையை ஆட்டினார்கள்.

பிறகு அவரை மோகனும் சாந்தியும் வாசல் வரை போய் வழியனுப்பி வைத்தார்கள்.

ஒரு வருடத்திற்கு பிறகு இன்று.

அதே மோகனின் வீடு.

அதே சோபாக்கள். அதே எதிர் எதிர்.

இவர்களுக்கு சற்று தள்ளி நின்றபடி சாந்தி.

இப்போது மோகன் பேச்சை தொடங்குகிறார்.

” மதி… டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்ட என் மகளை நீ இடையில் புகுந்து உன் படத்துல நடிக்க வச்சு வெறும் சாந்தியா இருந்தவளை நடிகை சாந்திஸ்ரீயாக மாத்திட்டே. அவளோட முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்! ரொம்ப பிரபலம் ஆகிட்டாள். இப்ப அவளோட கால்சீட் கேட்டு ஏழெட்டு தயாரிப்பாளர்கள் க்யூல நிற்கிறாங்க. அவளோட தலையெழுத்தையே நீ மாத்திட்ட. ரொம்ப தேங்ஸ் மதி.”

” நோ.. நோ.. உன் மகளோட தலையெழுத்தை நான் மாத்தல. அவ நடிகையானது தற்செயல்தான். அவளுக்கு நடிப்பதில் ஆர்வமிருந்தது.”

” இருந்தாலும் இனி அவள் அதிகமான படங்கள்ல நடிக்கப்போறாளே.. அதுக்கு நீதானே காரணம்!”

டைரக்டர் மதி கேள்விக்குறியோடு சாந்தியை பார்த்தார்.

” என்னம்மா உங்கப்பா இப்படி சொல்றார். நீ என்கிட்ட போன்ல வேற மாதிரி சொன்னியே.. அப்படின்னா உங்கப்பாவுக்கு விஷயத்தை நீ சொல்லலையா?”

இப்போது மோகன் குழப்பமாக தன் மகளிடம் திரும்பினார்.

” என்னது விஷயமா.. என்ன ஒரே சஸ்பென்ஸா இருக்கு. அங்கிள்கிட்ட போன்ல நீ என்ன சொன்னே?”

” அப்பா.. அது வந்து..”

” எதுவா இருந்தாலும் தாராளமா சொல்லுமா.”

” சொல்றேன்பா. அங்கிள் என்னை தன் படத்துல கதாநாயகியா அறிமுகப்படுத்தினாரு. அவர் கொடுத்திருந்த ‘ டாக்டர்’ கேரக்டருக்கு தகுந்த மாதிரி எப்படி நடிக்கனும்னு நடிப்பும் சொல்லிக்கொடுத்தாரு. நீங்களும் உங்க பங்குக்கு படம் இயற்கையா வரனும்னு உங்க அனுபவங்களை சொல்லி நான் நல்லா நடிக்க எக்கச்சக்கமா பயிற்சி கொடுத்தீங்க. உங்க ரெண்டு பேரோட ஆசியால நான் நல்லா நடிச்சேன். இப்ப படம் நல்லாப் போகுது.

மக்கள் என்னை ரோட்ல பார்த்தா ‘ ஹலோ டாக்டர்’ னு தான் கூப்பிடறாங்க. இப்ப ஏழெட்டு தயாரிப்பாளர்கள் கால்சீட் கேட்டு வந்திருக்காங்க. ஆனா எனக்கு..”

” ஏன் தயங்கிறே…சொல்லும்மா”

” அப்பா… எனக்கு தொடர்ந்து நடிக்க ஆசையில்லப்பா. இதைத்தான் நான் அங்கிள்கிட்ட போன்ல சொல்லியிருந்தேன். டாக்டரா நடிச்சதுக்கே மக்கள் மத்தியில் இவ்வளவு ரெஸ்பான்ஸ்னா எனக்கு இப்ப உண்மையிலேயே டாக்டர் ஆகனும்கிற ஆசை வந்திடிச்சு. இனி நான் நடிகை சாந்திஸ்ரீ இல்ல; டாக்டர் சாந்தி மோகன் MBBS! நீட் எக்ஸாம் எழுதனும். ஏற்பாடு பண்ணுங்கப்பா ப்ளீஸ்!”

” அப்படியா?!” என்று ஆச்சரியப்பட்ட மோகன் தன்னுடைய ஆசை நிறைவேறப்போகும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

இப்போது சாந்தி மதிச்செல்வன் பக்கம் திரும்பி,

” அங்கிள், உங்க கிட்ட ஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட்! ” என்றாள்.

” என்னம்மா?”

” எனக்கு நடிப்புத்திறமை இருக்குனு நீங்க அதை நீங்க வெளிக்கொண்டு வந்ததால …

உங்க படங்கள்ல மட்டும் நடிக்க ஆசைப்படறேன். நல்ல கேரக்டர் இருந்தா சொல்லுங்க. டாக்டருக்கு படிச்சிட்டே நடிக்கிறேன்.”

” ஓ.கேம்மா. அப்படியே ஆகட்டும்” என்று கூறி கை தட்டினார் மதிச்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *