சிறுகதை

ஞாபகநதிக் கரையில் | ராஜா செல்லமுத்து

மெரினா உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை. மயங்கும் மாலை வேளையில் மொய்த்துக் கிடைக்கும் ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தமிழகத்தில் உள்ள மொத்த ஆட்களும் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும்.

அவ்வளவு ஜனத்திரள் நிறைந்த அந்தக் கடற்கரையில் மனிதர்கள் விட்டுப்போன சுவடுகள் ஆயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

தோற்றுப் போனவர்கள். ஜெயித்தவர்கள். பணக்காரன். ஏழை, சிறுவர்கள் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் திருநங்கைகள், குதிரை என்று எத்தனையோ உயிர்களை தினமும் சுமந்திருக்கும் மெரினா கடற்கரை. கதைகள் பேசும் காதலர்கள் ஒருபுறம். தொட்டு உரசி லீலைகளில் ஈடுபடும் ஜோடிகள் இன்னொருபுறம். குறுகிய வீட்டுக்குள் குடும்பக் கதைகளை பேச முடியாமல் தனியே வந்து தன் குடும்பத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.

தகாத உறவுகள். தப்பான நடவடிக்கைகள். பணத்திற்கும் ஆசைக்கும் அலையும் மனிதர்கள் என்று எத்தனை எத்தனை விதமான மனிதர்களை இந்தக் கடற்கரை ஆண்டாண்டு காலமாக சந்தித்துக் கொண்டிருக்கிறது.இது அங்கே விரிந்து கிடக்கும் கடற்பரப்புக்குத் தெரியும். பரந்து கிடக்கும் கடற்கரைக்கும் தெரியும்.

நீர் நிறைந்த தண்ணீர் சாலையில் எங்கோ ஓரிடத்தில் தண்ணீரில் தீப்பிடித்தது போல தலையில் விளக்கை சுமந்துகொண்டு கரை சேருவதற்கு கப்பல் வந்து கொண்டிருக்கும்.

அங்கே ….

வரும் கப்பலை ஏகாந்தப் பெருமூச்சு விட்டபடியே நிலாநேசன் ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் அப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போது கடலும் மலையும் கடந்து கப்பல் வருகிறது என்று அவன் மனம் அறிந்து கொள்ளும். சிலு சிலுவென்று காற்று தொட்டுப் போகும் வங்காளவிரிகுடா கடல் தண்ணீர்.

லட்சியமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும் மக்கள். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலர்கள்.

என்ன வாரியா? என்று ஒருத்தனை கூப்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கடந்து அந்த கப்பலை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் நிலாநேசன்.

அந்தக் கப்பல் வந்து கொண்டிருந்தது பார்வைக்கு கப்பல் வரும் திசையில் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கடலில் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் கூட்டம் .

அங்கே போகாதே போகாதே கடற்கரையில் உள்ள தூரம் போகவேண்டாம்” என்று அரற்றிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம்.

“கொஞ்சம் பக்கத்துல போயிட்டு வர்றேன்” இன்னும் கொஞ்சம் ஜஸ்ட் பக்கம்தான்” என்று சிறுவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் அம்மா அவனை அவளை விடுவதாக இல்லை.

இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் .அந்த கடற்கரை பகுதியில் எரிந்து கொண்டிருக்கும் அண்ணா சதுக்கத்தின் அணையாத விளக்கு – அங்கு இருக்கும் மக்கள். எம்ஜிஆர் நினைவிடத்தில் இருக்கும் மக்கள் , கலைஞர் நினைவிடத்தில் இருக்கும் மக்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் இருக்கும் மக்கள் என்று எப்போதும் மக்கள் மொய்த்துக் கொண்டிருப்பார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்……

சோகங்களையும் சுகங்களையும் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கடற்கரை, பொழுது விடிந்தால் ஆட்களை சுமக்கும்.

மறுபடியும் பொழுது விடிந்ததும் மறுபடியும் இந்த மனிதர்களை சுமக்கும். இரண்டு பக்கமும் வியாபாரக் கடைகள். நடிகர்களின் படங்களை வைத்துக் கொண்டு போட்டோ எடுக்கும் மனிதர்கள். விதவிதமான பொம்மைகள் அடுக்கி வைத்திருக்கும் கடைகள். பலூன் சுட்டு கொண்டிருக்கும், சிறுவர்கள் ,தோசை சுட்டு கொண்டு இருக்கும் கடைக்காரர்கள் , கரும்புச் சாறு பிழிந்து கொண்டிருக்கும் மனிதரகள்…..

எங்கோ ஒருவன் சண்டையிடும் குரல். அலைகளின் ஓசை, ஆங்காங்கே அமர்ந்து கொண்டிருக்கும் ஜோடிகள். காந்தி சிலை, கண்ணகி சிலை, அவ்வையார் சிலை, பாரதியார் சிலை , வீரமாமுனிவர் சிலை, திருவள்ளுவர் சிலை என்று அத்தனை சிலைகளுக்கு அடியிலும் மனிதர்கள், மனிதர்கள்….

எங்கும் மனிதர்கள் .

கடற்கரை கவியரங்கம் என்ற பெயரில் கவிதை வாசித்துக் கொண்டிருக்கும் கவிஞர்கள்.

இப்படி எத்தனையோ நிகழ்வுகளை அனுதினமும் பார்த்திருக்கிறான் நிலாநேசன். இந்தப் பெருநகரத்தில் அவனுடைய மனது எப்பொழுதெல்லாம் ஓய்வு தேடுகிறதோ அப்பொழுதெல்லாம் தவறாமல் மெரினாவில் அவன் நின்று விடுவான் .

அவன் அங்கு வரும்போது ஜோடியுடன் அல்லது நண்பர்களுடனோ வருவதில்லை. தனியாகத்தான். ஏகாந்தம் எப்போதும் சுகமானது. சேர்ந்து இருக்கும் போது கிடைக்கும் இன்பம் ஒரு விதமானது. தனித்து இருக்கும்போது கிடைக்கும் இன்பம் வேறுவிதமானது.

மௌனத்திற்கும் சத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சந்தோஷம் தரும் மௌனம். பேசிக்கொண்டிருக்கும் உதடுகளை விட ஒட்டியிருக்கும் உதடுகளுக்கு வலிமை அதிகம். அதனால் தான் தியானம் என்பது நம்மை நாமே தெரிந்து கொள்வதற்கு ஒரு வழி என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை கடைப்பிடித்து என்னவோ இந்த மக்கள்த் திரளுக்கு மத்தியில் நிலா நேசன் தனி ஒருவனாகவே வந்து கடற்கரையில் ரசித்துவிட்டுப்போவான்

இப்படி அவன் வரும் ஒவ்வொரு நாளும்…. இல்லை…. வரும் போதெல்லாம் அவனுக்கு இந்த மெரினா ஏதோ ஒரு கதையை சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.

மனிதர்கள், மணல்வெளி முழுவதும் மனிதர்கள்….

கடற்கரையில் விளையாடும் மனிதர்கள். இப்படி எத்தனையோ மனிதர்களை வாசித்திருக்கிறான்.

ஆனால் இன்று அவன் கடற்கரைக்கு சென்றபோது கண்ட காட்சி, அவனை வியப்பில் ஆழ்த்தியது.

கடந்த நான்கு ஐந்து மாதங்களாக ஊரடங்கு என்ற பெயரில் ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

வெளியில் செல்வதற்கு செல்வதற்கு தடை. அப்படியே சென்றாலும் முகத்தில் முகமூடி’ சமூக இடைவெளி :என்று எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசாங்கம்.

நான்கு ஐந்து மாதங்களாக வீட்டிலேயே இருந்த நிலை அவனுக்கு ரொம்ப போர் அடித்தது .

அவன் கடற்கரை மணலில் கால் பதித்து இன்றோடு நீண்ட நாட்களாகிவிட்டன . அவனுக்குக் கதை சொல்லும் அலைகளை பார்க்காமல் இருப்பது கவலையாக இருந்தது.

எத்தனை எத்தனை மனிதர்களை சந்தித்த அந்தக் கடற்கரை. எந்த மனிதர்களையும் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களிடம் திரும்பிப் பேசும் வழக்கம் இல்லா இயற்கை. அதோ அது பழைய கடலின் அலைகள் தானா? இல்லை கடலில் புதிது புதிதாக தண்ணீர் உருவாகிக் கொண்டே இருக்கிறதா? என்பது ஒரு புரியாத புதிர் தான். அந்தக் கரையைத் தொடும் அலைகள், கடலின் தண்ணீர் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறதா? என்று வியப்பு மேலிட அவன் கடற்கரை மணலில் நடந்து சென்று கொண்டிருந்தான்.

என்றோ பதிந்த காலடித் தடங்கள் எதையோ சொல்லிக் கொண்டிருந்தன . எங்கும் வெட்டவெளி, மருந்துக்குக் கூட ஒரு மனிதர் இல்லை.

ஏதோ ஒரு எலும்புத் துண்டுக்காக சண்டையிடும் காகங்கள்.

ஒற்றையாய் உட்கார்ந்திருக்கும் ஒரு நாய்.

வானத்தில் பறக்கும் குருவிகள் ஓசை. பேசிக் கொண்டிருக்கும் மனிதர்கள் எங்கும் இல்லை.

காலாற நடந்து செல்கிறான். அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்கள் இலலை. ஒரு சில மனிதர்களை பார்க்கிறான்.எல்லாம் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் .ஏதோ கைகளில் , தோளில் தூக்கிக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருந்த கடற்கரை எந்த ஒரு சந்தோஷத்தை அள்ளி கொடுத்த கடற்கரை, இந்த மணல் வெளி முழுவதும் பூத்துக் கிடந்த மனிதர்கள். கலர் கலராக எரிந்து கொண்டிருந்த விளக்குகள். யாரும் இல்லையே என்று தன் மனதிற்குள் நினைத்தபடி கடற்கரையை நோக்கிச் செல்கிறான்.

அலைகளின் சத்தம் ரொம்ப வேகமாக அவன் காதுகளில் கேட்கிறது. இதுவரை அவன் அப்படி ஒரு சத்தத்தை கேட்டதில்லை . ஏனென்றால் அலைகளின் சத்தத்தை வாகனங்களின் இரைச்சல் இதுவரை விழுங்கிக் கொண்டு இருந்தது. இப்பொழுது மனிதர்களின் சப்தமும் அதிகமான வாகனங்கள் சத்தமும் இல்லாமல் இருந்ததால் அந்த அலைகளின் சத்தம் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அலை கடலை நோக்கி நடக்கிறான் . அவனை சுற்றி மனிதர்கள் இல்லை. திரும்பிப் பார்க்கிறான். நான்கு திசைகளிலும் பார்க்கிறான். வியாபார ஆட்கள் இல்லை. துப்பாக்கி சுடும் சிறுவர்கள் இல்லை . பலகாரம் சுடும் வியாபாரிகள் இலலை. எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

கட்டுப்பாடுகள் கொண்ட அந்தக் கடற்கரைக்கு அவன் மட்டும் தனியாகச் செல்கிறான்.

அலைகளின் சத்தம் அதிகமாக கேட்டுக் கொண்டிருந்தது. அவனது நடை கொஞ்சம் வேகம் எடுத்தது.

அலையில் போய் நிற்கிறான். மனிதர்களைக் காணாத ஏக்கத்தில் வேகமாக வந்துபோய் கொண்டிருக்கின்றன அலைகள்..

அலைகளில் கால் வைக்கிறான்.

வேறு மனிதர்கள்….. இங்கே ? மனிதரே இல்லை.

சிறிது நேரம் அலைகளிலேயே கால் பதிக்கிறான். அவன் காலைத் தொட்டுத் தொட்டுப் போகிறது அலை.

தீயைத் தலையில் சுமக்கும் கப்பல்கள் கடலில் இல்லை.

திசைகளெல்லாம் பார்க்கிறான் .

கடற்கரை எங்கும் அமைதி.

யாருப்பா அது சீக்கிரம் வா நேரமாச்சு” என்று யாரோ குரல் கொடுக்க….

குரல் வந்த திசையை நோக்கித் திரும்புகிறான்.

குதிரைகளில் இரண்டு மூன்று காவலர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இருட்டிக் கொண்டு வந்தது.

மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த காவலர்கள் இங்கெல்லாம் வரக்கூடாது. சீக்கிரம் கிளம்புங்க. இங்கே ஏன் வந்தீங்க ? வீட்டுக்கு போங்க” என்று அவனைக் காவலர்கள் விரட்ட ….

சரி சார் சும்மா வந்தேன் என்று தனக்கான பதிலைச் சொன்னான் நிலா நேசன். கிளம்புங்க என்று காவலர்கள் அவனை கடந்து குதிரையில் பயணம் போகிறார்கள்.

அலையைவிட்டுக் கரையேறிய நிலா நேசன் மணல்வெளியில் நடக்கிறான், அவன் காதுகளில் பழைய மெரினா ஓசை வந்து நிறைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *