சிறுகதை

ஜோதி ஏற்றிய ஜோதி | முகில் தினகரன்

முகூர்த்தம் முடிந்த அடுத்த நிமிடம் மொத்தக் கூட்டமும் டைனிங் ஹாலை நோக்கிப் பறந்தது.

“என்னங்க…கூட்டத்தைப் பார்க்கும் போது இப்போதைக்கு நாம உள்ளாரவே போக முடியாது போலிருக்கே!” என்றாள் மீனாட்சி.

“ஆமாம் மீனாட்சி…எனக்கும் அப்படித்தான் தோணுது! பேசாம முகூர்த்தத்துக்கு முன்னாடியே சாப்பிட்டிருக்கணும்!” கூட்டத்தை பிரமிப்பாய் பார்த்தபடி சொன்னார் கந்தசாமி.

அப்போது, “அய்யா…வணக்கம்!…அம்மா வணக்கம்!” என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

கிட்டத்தட்ட முப்பத்தி நாலு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் கூடவே அவள் கணவர் போன்ற தோற்றத்தில் ஒரு மனிதரும் இவர்களை மிகவும் மரியாதையாய் வணங்க

“வணக்கம்மா!…நீங்க?” விழித்தார் கந்தசாமி.

“அய்யா…நீங்க ஜோதியோட அம்மா…அப்பாதானே?” அப்பெண் கேட்க

“ஆமாம்மா..நீ ஜோதியோட ஃபிரண்டாம்மா?”

“ம்ம்ம்…ஃபிரண்டுன்னு சொல்ல முடியாது.. வேணுமின்னா “பக்தை”ன்னு வெச்சுக்கலாம்!”

“என்னது?… “பக்தை”யா?…என்னம்மா சொல்றே?” மீனாட்சி புரியாமல் கேட்க,

“ஆமாம்மா…ஜோதி எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கை கொடுத்த தெய்வம் என்கிற போது…நான் அவளோட “பக்தை”ன்னு சொல்லுறதுதானே சரி?”

குழப்பான முகத்தோடு மீனாட்சியும் கந்தசாமியும் ஒருவரை ஒருவர் பார்க்க,

“ஏய் சுதா..அவங்களை ரொம்ப குழப்பாம விஷயத்தைச் சொல்லு, பாவம் தவிக்கிறாங்க!” என்றார் அப்பெண்ணுடன் வந்த அந்த நபர்.

“ம்மா…என் பேரு சுதா!…நான் உங்க ஜோதி ரிசப்ஷனிஸ்ட்டா வேலை பார்க்கற அந்த லேடீஸ் ஹாஸ்டல்லதான் வேலையில் இருந்தேன்!…ஆனா இப்ப இல்லை!..ஏன்னா?.. அப்ப…நானும் இவரும் சண்டை போட்டுட்டு பிரிஞ்சு கிடந்தோம்!…அதனால நான் அந்த ஹாஸ்டல்ல கிடந்தேன்…இப்ப சேர்ந்துட்டோம்…அதனால இல்லை!” அப்பெண் மகிழ்ச்சியோடு சொன்னாள்.

“அப்படியா…ரொம்ப சந்தோஷம்மா!”

“இந்த சந்தோஷத்துக்கெல்லாம் காரணம் உங்க மக ஜோதிதான்!…ஹூம்…வயசுல என்னை விட ரொம்பச் சின்னவதான். ஆனா அவதான் எனக்கு வாழ்க்கையையே சொல்லிக் கொடுத்தவ!….கணவன் மனைவி உறவுன்னா என்ன?…எங்க தட்டிக் கொடுக்கணும்!…எங்க விட்டுக் கொடுக்கணும்!…எப்ப கொஞ்சணும்?…அப்ப கெஞ்சணும்?…எல்லாத்தையும் கத்துக் கொடுத்தவ!…சத்தியமா சொல்றேம்மா…என்னைய பெத்தவ கூட எனக்கு இவ்வளவு தெளிவா புத்தி சொல்லியிருக்க மாட்டா!…என்கிட்ட இருந்த கோபம்…வேகம்…அவசரம்..எல்லாத்தையும் மாத்தி, பொறுமை…அமைதி…சாந்தம் எல்லாத்தையும் எனக்குள்ளே விதைச்சா!”

விழிகளை விரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் கந்தசாமி.

“அது மட்டுமில்லை…எந்தக் காலத்திலும் இந்த மனுஷன் முகத்துல விழிக்கக் கூடாது!..ன்னு முடிவு பண்ணிட்டு டைவர்ஸுக்காக காத்திருந்த என்னோட மனசை பண்படுத்தி…என் கிட்ட இருந்த திமிரைக் கரைச்சு, நானே வலியப் போய் அவரைப் பார்த்துப் பேச வெச்சா!…” சொல்லும் போது குரல் கரகரத்துப் போய் மேற்கொண்டு பேச முடியாமல் நின்றாள் அந்த சுதா.

அவள் கணவர் தொடர்ந்தார், “ஆமாம்மா எந்த அளவுக்கு இந்த சுதாவை அன்னிக்கு நான் வெறுத்தேனோ அந்த அளவுக்கு இன்னிக்கு அவளை நேசிக்கறேன்!…எப்படி?…எல்லாம் உங்க மகளாலே!…இப்ப ரெண்டு பேரும் டைவர்ஸ் பேப்பர்ஸையெல்லாம் கிழிச்சு வீசிட்டு சேர்ந்து…சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கோம்!…அதுக்கு அடையாளம்தான் சுதா வயித்துல வளர்ற என் குழந்தை!”

“ஜோதியா?…என் மகள் ஜோதியா?…விளையாட்டுப் பிள்ளை மாதிரி வீட்டுக்குள்ளார திரிஞ்சிட்டிருந்த என் மகள் ஜோதியா?” நம்ப முடியாமல் விழித்தாள் மீனாட்சி.

“அம்மா…என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நிச்சயமா ஜோதின்னுதான் பெயர் வைக்கப் போறேன்!…அது ஆணாக இருந்தாலும் சரி…பெண்ணாக இருந்தாலும் சரி!” சொல்லிவிட்டுத் தன் கணவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் அப்பெண்.

மூன்றாவது பந்தியில் சற்று கூட்டம் குறைவாயிருக்க மீனாட்சியும் கந்தசாமியும் டைனிங் ஹால் நோக்கி நடந்தனர்.

****

இரண்டு நாட்களுக்குப் பிறகு, வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்க, எழுந்து சென்று பார்த்தார் கந்தசாமி. ஒரு முதியவரும் ஒரு வயதான பெண்மணியும் இறங்கி வந்தனர்.

“ஜோதி…வீடு?” அப்பெரியவர் கேட்டார்.

“ஆமாம் இதுதான்!…உள்ளார வாங்க!” என்றார் கந்தசாமி.

சுவற்றைப் பிடித்துக் கொண்டு, மெல்லப் படிகளில் ஏறி, வீட்டிற்குள் வந்தார் அந்தப் பெரியவர். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தாள் அப்பெண்மணி. இருவரையும் ஹால் சோபாவில் அமர வைத்தார் கந்தசாமி.

உள்ளங்கையை கண்களுக்கு மேல் கூரை போல் வைத்து கந்தசாமியை உற்றுப் பார்த்த பெரியவர், “நீ…ஜோதியோட அப்பாதானே தம்பி?” என்று கேட்டார்.

“ஆமாம் பெரியவரே!”

சமையலறை வாசலில் நின்றிருந்த மீனாட்சியை அப்பெரியவர் பார்க்க, கந்தசாமி தாமாகவே சொன்னார், “அவங்கதான் ஜோதியோட அம்மா! என்று,

ஒரு சிறிய அமைதிக்குப் பின், “பொசுக்”கென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் பெரியவர்.

திடுக்கிட்டுப் போன கந்தசாமி, “அய்யா…என்னாச்சு?..ஏன் அழறீங்க?” பதறினார்.

“தம்பி…நான் ரிடையர்டு ஸ்கூல் வாத்தியார்…இவ என் சம்சாரம்!…எங்களுக்கு ஒரே மகள்!…மகேஸ்வரி!…அவளுக்கு லட்சக் கணக்குல செலவு பண்ணி ஆசை ஆசையா கல்யாணம் பண்ணி வெச்சோம்!…அவ ஜாதக தோஷமோ என்னமோ..தாலி கட்டுனவன் ஒரே மாசத்துல மேல போய்ச் சேர்ந்துட்டான்!..” சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் அருவி. “ஆச்சு தம்பி…அது நடந்து மூணு வருஷமாச்சு!…புருஷன் போனப்புறம் அவ எங்க கூடத்தான் இருந்தா!…நீங்களே சொல்லுங்க தம்பி..எங்க காலம் வரைக்கும் வேணா நாங்க அவளை வெச்சுக்குவோம்….பாதுகாப்பா இருப்போம்!..அதுக்கப்புறம் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?”

தலையை மேலும் கீழும் ஆட்டினார் கந்தசாமி.

“அதுக்காகத்தான் தம்பி…அவளுக்கு மறுமணம் பண்ண நாங்க முடிவெடுத்தோம்!…அது தப்பா தம்பி?”

இப்போது இட வலமாகத் தலையாட்டினார் கந்தசாமி.

“அதுக்காக கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறி…உமன்ஸ் ஹாஸ்டல்ல போய்ச் சேர்ந்துட்டா தம்பி”

“அடடே!” அங்கலாய்த்தார் கந்தசாமி.

அதுவரையில் அமைதியாய் இருந்த அப்பெண்மணி திடீரென்று பேச ஆரம்பித்தாள், “அவளைப் பார்க்கறதுக்காக ஒரு தடவை ஹாஸ்டலுக்குப் போயிருந்தப்ப உங்க மகள் ஜோதியை அங்க பார்த்தோம்!…அவகிட்ட எங்க கவலையை சொன்னோம்!… “நீங்க கவலைப்படாம போங்க!..நானாச்சு!” ன்னு நம்பிக்கையோட சொல்லியனுப்பினா உங்க மகள்!…அப்புறம் என்ன சொன்னாளோ…என்ன செஞ்சாளோ தெரியலை!…என் பொண்ணு மறுமணத்துக்கு சம்மதிச்சுட்டா!”

தன் கையிலிருந்த பையைத் திறந்து, அதிலிருந்து ஒரு திருமண பத்திரிக்கையை எடுத்து, கந்தசாமியிடம் நீட்டிய பெரியவர், “முதல் பத்திரிக்கையை எப்போதும், எல்லோரும் கோவிலுக்குக் கொண்டு போய் சாமிக்குத்தான் வைப்பாங்க!…எங்களைப் பொறுத்தவரை ஜோதி இருக்கற இந்த வீடுதான் கோவில்…அவதான் எங்களுக்கு சாமி…அதான் இங்க கொண்டு வந்திருக்கோம்!” என்றார் தழுதழுத்த குரலில்.

நெகிழ்ந்து போனார் கந்தசாமி. அவர் மனத்திரையில் சென்ற வருடம் நடந்த அந்த நிகழ்ச்சி திரைப்படமாய் ஓடியது.

*

“என்னது…அந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் போறாளா?..ம்ஹூம்…ஆகாது…ஆகாது!” கந்தசாமி கத்தலாய்ச் சொல்ல,

“ஏன்?…ஏன் ஆகாது?” ஜோதி எதிர்க்கேள்வி கேட்டாள்.

“ஏய்…மீனாட்சி, என்னடி பொண்ணை வளர்த்து வெச்சிருக்கே?…பெத்த அப்பனையே எதிர்த்துக் கேள்வி கேட்குது?” தன் கோபத்தை மனைவி மீது செலுத்தினார் கந்தசாமி.

“பதில் நியாயமானதா இருக்கும் பட்சத்தில் ஏன் கேள்வியைக் கண்டு பயப்படணும்?” தெளிவாகக் கேட்டாள் ஜோதி.

“விருட்”டென்று திரும்பிய கந்தசாமி, “த பாரு…நீ சின்னப்புள்ள….உன் கிட்ட சில விஷயங்கள் பேசக் கூடாதுன்னுதான் நான் காரணத்தை சொல்லத் தயங்கினேன்!…எப்ப நீ இவ்வளவு தூரம் பேச ஆரம்பிச்சிட்டியோ இனி தயங்கிப் பிரயோஜனமில்லை!…சொல்லித்தான் ஆகணும்!…அதாவது அந்த லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கற பொம்பளைங்க எல்லோருமே தத்தம் வாழ்க்கைல சில மோசமான நிகழ்வுகளைச் சந்திச்ச பிறகுதான் அங்க வந்து சேர்றாங்க!…சில பேர் விவாகரத்துக்கு அப்ளை பண்ணிட்டு வந்திருப்பாங்க!…சில பேர் விவாகரத்தை வாங்கிட்டே வந்திருப்பாங்க!…சில பேர் புருஷனை இழந்துட்டு வந்திருப்பாங்க!…இன்னும் சில பேர் புருஷனே கிடைக்காம வந்திருப்பாங்க!…பச்சையா சொல்லணும்னா நல்லவிதமான பொம்பளை ஒருத்தி கூட அங்க இருக்க மாட்டா!”

“சரி…இதுக்கும் நான் அங்க வேலைக்குப் போறதுக்கும் என்ன சம்பந்தம்?” கேட்டாள் ஜோதி.

“இருக்கு…சம்பந்தம் இருக்கு!…முழுக்க முழுக்க அப்படிப்பட்ட பொம்பளைங்க கூட மட்டுமே பழகற சூழ்நிலை உனக்கு உருவாகும் போது, உன் மனசுல உனக்கே தெரியாம கல்யாண வாழ்க்கை…குடும்ப வாழ்க்கை…இதுக மேலெல்லாம் ஒரு வெறுப்பு தோன்றிடும்!… இல்லற வாழ்க்கை ஆசையே போயிடும்!…ஏன்னா அவங்க பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரிய வரும் போது…உனக்குள் ஒரு அச்ச உணர்வுதான் ஓங்கி நிற்கும்!…அதனால உன் வாழ்க்கையே கூட திசை மாறிப் போனாலும் போயிடும்!”

தந்தை சொல்வதைக் கேட்டு, “ஹா…ஹா…ஹா…”என்று வாய் விட்டுச் சிரித்தாள் ஜோதி. “அப்பா…ஏம்பா எல்லா விஷயத்தையும் எதிர் மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கறீங்க?…கொஞ்சம் மாத்தி நேராப் பாருங்க!…பாஸிட்டிவ்வா சிந்திக்கப் பழகுங்க!”

“க்கும்…இதுக கூட இருந்திட்டு எங்க போயி பாஸிட்டிவ்வா சிந்திக்கறது?”

“இல்லைப்பா!…எனக்கு நம்பிக்கையிருக்கு!..நான் அங்க போய் வேலை பார்க்கறதினால என் வாழ்க்கை இருளாயிடாது…மாறா மத்தவங்களோட இருளைப் போக்கற விளக்கா வேணா மாறினாலும் மாறும்!”

“புரியலைம்மா!” தலையை இட வலமாய் ஆட்டினார்.

“சில விஷயங்களைச் சொன்னாப் புரியாது…செஞ்சு காட்டினாத்தான் புரியும்!…புரிய வைக்கறேன்!….அதனால….ஸாரிப்பா!…இந்த விஷயத்துல உங்க பேச்சைக் கேட்கக் கூடிய சூழ்நிலைல நான் இல்லை!..என்னை மன்னிச்சிடுங்க!”

*

“ச்சே!…அன்னிக்கு என் பேச்சை மீறி, அங்க வேலைக்குப் போய்ச் சேர்ந்ததுக்காக ஜோதியை எவ்வளவு மோசமாத் திட்டினேன்!…எவ்வளவு அவமானப் படுத்தினேன்!…அவ்வளவையும் பொறுத்துக்கிட்டு…தன்னோட செயல் நூறு சதவீதம் சரியானதுன்னு புரூஃப் பண்ணிட்டாளே என் மகள்!…ஹூம்…இந்த வயசுக்கு எனக்கு வராத ஒரு பக்குவமும் தெளிவும் என் மகளுக்கு இவ்வளவு சின்ன வயசிலேயே வந்திருக்குன்னா…அவ…அவ…தெய்வ மகள்தான்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *