போஸ்டர் செய்தி

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி; உறுதிமொழி

சென்னை, டிச.4–

ஜெயலலிதாவின் 2–வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நாளை (5–ந் தேதி) ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அண்ணா தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், புரட்சித் தலைவி அம்மா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரராகிய நாள் 5.12.2016.

புரட்சித் தலைவி அம்மாவின் 2ம் ஆண்டு நினைவு நாளான நாளை (5ந் தேதி) காலை 9.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, அம்மாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

உறுதிமொழி ஏற்பு

அதனைத் தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *