நாடும் நடப்பும்

ஜி20 தலைமை, இந்தியர்களுக்கு பெருமை


ஆர். முத்துக்குமார்


இந்தியாவின் வலிமையை உலகம் புரிந்து கொள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம் வந்து விட்டது, அதைத்தான் பிரதமர் மோடியும் சென்ற வார வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசும்போது சுட்டிக்காட்டி உள்ளார்.

நாளை முதல், அதாவது டிசம்பர் 1-–ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. ஜி-20 தலைமை இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நன்மை, ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா வழிகாட்டும்.

உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஜி-20 தலைமைக்காக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளோம்.

உலக மக்கள் அனைவரும் வளமாக வாழ வேண்டும். உலகம் முழுவதும் அமைதி நிலைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். ஜி-20 தலைமையின் போது இந்த லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம். உலகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்தியாவால் தீர்வுகாண முடியும்.

தலைநகர் டெல்லி மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜி-20 அமைப்பின் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அப்போது, பல்வேறு நாடுகளில் இருந்துவரும் மக்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்களுக்கு உங்கள் பகுதியின் கலாச்சாரம், தனித்துவங்களை எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கிறேன். ஜி-20 மாநாடு, நிகழ்ச்சியோடு ஏதாவது ஒரு வகையில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஜி-20 தொடர்புடைய விவாதங்கள், போட்டிகள் நடத்தலாம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் இதுபோன்ற போட்டிகளை நடத்த வேண்டும்.

மொத்தத்தில் ஒட்டுமொத்த இந்தியர்களும் உலக தலைவர்கள் நம்மை உற்று கவனிக்கும் நேரத்தில் நாம் நமது வல்லமைகளை வெளிப்படுத்த வேண்டும், மேலும் நாம் நம்மை அறியாது செய்யும் தவறுகளை நமக்கு நாமே சுட்டிக்காட்டி அவற்றை தொடர்ந்து செய்யாமல் இருக்க நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும்.

எத்தனையோ மரணங்கள் ஏற்படுத்தி வரும் ‘செல்பி’ மோகம் இன்று தொடர என்ன காரணம்?

உண்மையில் சுய புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு கலை, அதுபற்றி தெளிவான பாடம் யாரும் சொல்லித் தராத நிலையில் ‘கண்டதே கோலம்’ என்று விபரீத இடங்களில் படம் எடுத்துக் கொள்ள துணிகிறார்கள். இது சின்ன விஷயமாக தெரியலாம், எதிலும் நமது ஆரம்ப பாடங்கள் உரிய திசையில் இல்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டுவது போல் தான் இருக்கிறது அல்லவா?

உலகெங்கும் ஆரம்ப பாடங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் எப்படி என்பதை அறிந்து கொள்ள நமக்கு தேவையே இல்லை, காரணம் கல்விக்கும், அறிவுசார் சமுதாயம் படைக்கவும் வழிவகுத்த முன்னோடிகள் நாம், ஆனால் ஏனோ சிறுசிறு அம்சங்களை பற்றி சொல்லித் தராத கல்வியறிவால் இருப்பதை உணரவேண்டும்.

எந்த இருசக்கர வாகன ஓட்டுனர் பள்ளியும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ போட்டுக் கொண்டால் தான் ஓட்ட சொல்லித்தருவோம் என்று சொல்வது தான் சரி என்ற அக்கறையே இல்லை, காசு கொடு, வாகனத்தை ஓட்டு என்று பாடம் சொல்லித்தரப்பட்ட பிறகு ‘ஹெல்மெட்’ போட்டு ஓட்டுவது ஏதோ தேவையற்ற குற்றம் போல் தானே நாம் கருத ஆரம்பித்து விட்டோம்!


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *