சிறுகதை

சொந்த வீடு – தருமபுரி சி.சுரேஷ்

மகேஷ் – இவனுக்கு வீடு வாங்க வேண்டும் எனும் பெரிய லட்சியம் , கனவு கிடையாது

காரணம் அவன் ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தான். அதுதான் அவன் முழு சொத்தும் மூலதனமும் ஆகும் ;

மூதாதையர்கள் சொத்து என சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது.

அவனுடைய தாத்தா சொத்து,வீடு எல்லாவற்றையும் அப்பா குடித்து குடல் வெந்து செத்துவிட்டார்.

பொறுப்பற்ற தகப்பனுக்குப் பிறந்த பொறுப்பான ஒரே பிள்ளைதான் மகேஷ்.

மகேஷ் படிக்க வசதி இல்லாததால் எட்டாம் வகுப்போடு நின்று விட்டான்.

அவன் அம்மாவுடன் பிறந்த வசதியற்ற மாமா அவன் மீது அன்பு வைத்திருந்தார்.

அவனின் நற்குணங்களையும் பொறுப்புணர்வும் கண்டு தன் ஒரே மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

ஒரு பெட்டிக்கடையையும் வைத்து கொடுத்தார்.

மகேஷ் யாரையும் இதுவரை ஏமாற்றியதும் இல்லை, யாரிடமும் ஏமாந்ததும் இல்லை.

தனக்கு உள்ளதே போதும் என அன்றாட வருமானத்தை வைத்து தன் குடும்பத்தை எளிமையாய், இனிமையாய் ,அருமையாய் நடத்தினான்.

இருந்தாலும் தான் வசித்து வரும் வீட்டிற்கு மாத வாடகை ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை கொடுப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

ஆகவே புது வீடோ, பழைய வீடோ ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என நினைத்தான்.

மகேஷ் தனக்குள்ளே பேசிக் கொண்டான் வீடு என்பது அனேகருக்கு கனவாகவே முடிந்து விடுகிறது.

ஒன்று மூதாதையர்கள் வீட்டைக் கட்டி வைத்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் தன்னிடம் அதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாத நிலை தான் என்னுடைய நிலை என்று வருந்தினான்.

சொந்தங்களும் பந்தங்களும் நல்லது கெட்டதுக்கு வருவார்கள்; தரம் பார்த்து பழகுவார்கள்.

உருகி பேசுவார்கள் ; அவர்களைச் சொல்லித் தவறில்லை; உலகப் போக்கே அதுதானே…

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் ; வீட்டு ஓனர் மகா கறார் பேர்வழி.

பாயில் சோர்ந்த நிலையில் தலையணையில் தலைவைத்து சிந்தித்துக் கொண்டிருந்த அவனுடைய நினைவுகளை அவன் மனைவி புவனா “என்ன வீட்டு கனவா கவலைப்படாதீங்க” என்றாள்.

இல்ல புவனா நமக்குன்னு சொந்த வீடு இருந்தா எப்படின்னு யோசனை பண்ணி பார்த்தேன்; மாசம் மாசம் வாடகை கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கு. சிலநேரங்களில் உன்னுடைய நகையை அடமானம் வச்சு கொடுக்க வேண்டியதா இருக்கு. அதை மீட்பது பெரும்பாடு ஆகிவிடுகிறது”என்றான்.

“எப்ப இது நடக்குமா அப்பப்ப அது அது நடக்கும் “என நம்பிக்கை ஊட்டினாள் புவனா.

புவனா தன் மாமாவிற்கு ஒரே மகள் ஏழ்மையான குடும்பம் என்றாலும் தன் அப்பாவால் செல்லமாய் வளர்க்கப்பட்டவள்.

அவளும் தன் அப்பாவின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து உணர்ந்து அதற்கேற்றபடி நடந்து கொண்டவள்.

அதனால்தான் வந்த இடத்தில் என்னுடன் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்றபடி தன்னை பக்குவப்படுத்திக் கொண்டாள்.

இவர்களுக்கு அருமையான ஒரு செல்லக்குழந்தை பெயர் பானு இரண்டு வயதாகிறது.

அவன் மாமாவின் வீடு அடுத்த தெருவில் இருக்கிறது அதனால் மகேஸ்வரிக்கு பிரச்சனை இல்லை; அடிக்கடி அவள் பெற்றோர்கள் வந்து தன் மகளை பார்த்துக் கொள்ள உதவி செய்வார்கள்.

மகேஷின் அம்மாவும் கேன்சர் வியாதியினால் அவதிப்பட்டு தொடர் சிகிச்சையில் பலனின்றி மரித்துப் போனார்கள்.

தனித்திருந்த மகேஷுக்கு ஆறுதல் கூறி வழிநடத்தியவர் அவன் மாமா மட்டுமே.

இப்பொழுது அவனுக்கு சந்தோஷம் என்று சொன்னால் தன் மனைவியும் பெற்ற பிள்ளை மட்டுமே.

தன்னை புரிந்துகொண்டு தன் மேல் பாசத்தை செலுத்துகிற அத்தை, மாமா அவர்களுக்கும் அவன் நன்றி உள்ளவனாய் இருந்தான்.

உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை மகேஷ் அனேக நேரங்களில் உணர்ந்து இருக்கிறான்.

ஒரு சில உறவுகளால் வாழ்க்கை முழுவதும் தொல்லைகள் தான். அதே நேரத்தில் எந்த உறவும் வேண்டாம் என ஒதுங்கி வாழ்வதும் மிகவும் கடினம்.

இறைவனுக்கே மானுட உறவின் அவசியம் தேவைப்படுகிறது. அப்படி என்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் உறவுகள் அவசியம்.

தன் மனைவிக்காக தன் பிள்ளைக்காக கடவுளிடம் அடிக்கடி அவன் நன்றி சொல்வான்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது வருடங்கள் பல ஆயிற்று வீட்டு மனைகளின் விலைகள் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் உயர்ந்து கொண்டே சென்றது.

வீடு வாங்குவது என்பது கனவில் கூட இனி நினைக்க முடியாத ஒன்றாய் மாறிப்போனது.

ஆகவே மகேஷ் அந்த கனவில் இருந்து விடுபட்டான்.

இனி வீணான கனவுகளுக்கு இடங்கொடுத்து தன் மனதை துயரத்திற்கு உட்படுத்த வேண்டாம் என முடிவெடுத்தான்.

வீட்டு ஓனர் வருடத்திற்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் வாடகையை கூட்டினார்.

மகேஷுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தன் கஷ்டங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வது ? அது கேள்விக்குறியாகவே இருந்தது

இன்று அவனுடைய திருமண நாள்.

தன் அத்தை,மாமா வீட்டுக்கு அழைத்திருந்தான்.

அவர்கள் தன்னுடைய மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் பேரக் குழந்தைக்கும் புதிய ஆடைகளை வாங்கிக் கொண்டுவந்து உற்சாகமாய் கொடுத்தார்கள்.

அவனுடைய மாமா மகேஷை பார்த்து “மாப்பிள கொஞ்ச நாளா உங்களை நான் பாத்துட்டு இருக்கேன். ரொம்ப சோகமா இருக்கீங்க. உங்க பிரச்சனைதான் என்ன” என்றார்.

“ஒன்னு இல்ல மாமா ; நாங்க நல்லா தான் இருக்கோம்’’, என்றான்

“இல்ல மாப்பிள்ளை எதையோ நீங்க மறைக்கிறீங்க”.

உடனே புவனா” இல்லப்பா அவர் எப்ப பாரு வீட்டை பத்தியே யோசனை பண்ணிட்டு இருப்பார்”.

“வீடா என்ன வீடு”

“புதுசா ஒரு வீடு வாங்கணும் அப்படின்றது அவருடைய நெடுநாள் கனவு. அது நடக்காததால அவர் அடிக்கடி அப்படி ஆகிடுவாரு”.

“மாப்பிள இதுக்கா இவ்வளவு கவலை படுறீங்க

எங்களுக்கு பிறகு எங்க வீடு யாருக்கு போய் சேரும் உங்களுக்கு தான் என்றார்”.

“மாப்பிள இன்னைக்கு நானும் அத்தையும் உங்களுக்கு கொடுக்கிற ஒரு கிப்ட் என்ன தெரியுமா புது வீடு”.

“என்ன மாமா சும்மா நான் யோசிச்சேன். நீங்க திடீர்னு இப்படி சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல” ஆச்சரியமும் கேள்வி குறியும் கொண்டவனாய் தன் மாமாவைப் பார்த்தான்.

“ஆமப்பா உங்களுக்கு தெரிய வேணாம் சஸ்பென்ஸாக இருக்கட்டும் அப்படினு தான் நாங்க சொல்லாமல் இருந்தோம் ; புவனாக்கு கூட தெரியாது”.

“கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க மாமா”.

நம்ம அரசாங்கம் இலவச வீடு கட்டி தராங்கதான. அதுல எனக்கும் ஒரு வீடு கிடைச்சிருக்கு நேத்துதான் நேத்து தான் நம்ம தொகுதி எம்.எல்.ஏ வீட்டு சாவி கொடுத்தார்.

புவனாவையும் தன் மருமகனையும் ஒருசேர நிற்க வைத்து அந்த சாவியை பூப்பழ தட்டோடு கொடுக்கப்பட்டது.

மகேஷின் கண்களில் ஆனந்த கண்ணீர் தன் பெற்றோர்களுக்கு மேலாக இவர்கள் நேசிக்கிறார்கள் என தன் அத்தை மாமாவின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான்.

இந்த அன்பை என்னவென்று சொல்வது; அவனின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறியது.

புது வீட்டிற்குள் நுழைந்தான்.

பெருமூச்சு விட்டான்; இனி மாதந்தோறும் வாடகை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சுதந்திரக் காற்றை அந்த வீட்டிலேயே சுவாசித்தான். தன் மகள் சுவற்றில் வரையும் ஓவியங்களை இரசித்தான்.

தன் மனைவி ஒவ்வொரு அறையிலும் ஆணி அடித்து போட்டோக்களை மாட்டி வைப்பதை பார்த்து ரசித்தான்.

இப்பொழுது அவன் வாழ்வு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

இறைவனை ஒவ்வொரு நிமிடமும் நினைத்தான். தான் வணங்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *