செய்திகள் போஸ்டர் செய்தி

சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டுமான பணிகள்: எடப்பாடி நேரில் ஆய்வு

சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டுமான பணிகள்:

எடப்பாடி நேரில் ஆய்வு

பிப்ரவரி மாதம் பணிகள் முடிவடையும்

சேலம், ஜூன் 29–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:–

அம்மாவின் நல்லாசியோடு கால்நடைப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணிகள் துவங்கப்பட்டு விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதற்கட்டமாக, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ.82.13 கோடியிலும், கால்நடை மற்றும் விலங்கின ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ. 564.44 கோடியிலும், இந்த கால்நடை பூங்காவிற்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக ரூ. 270 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக கால்நடை பூங்காவிற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி ரூ. 1,022 கோடியாகும். இப்பூங்காவிற்கு தற்போதுவரை ஒதுக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 1,102 ஏக்கர் ஆகும். மேலும், தேவைக்கேற்றவாறு விரிவுபடுத்தப்படும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா. இதில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலக கட்டடம், 8 கல்விசார் வளாகம், நூலகக் கட்டடம், மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, இரண்டு விடுதி காப்பாளர் குடியிருப்புகள், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை என 20 கட்டடங்களுக்கான பணிகள் மொத்தமாக 3 லட்சத்து 72 ஆயிரத்து 473 சதுர அடி பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. வேளாண் பெருமக்களின் உப தொழிலான கால்நடை வளர்ப்பிற்கு இந்தக் கால்நடை பூங்கா மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகிறேன்.

நாட்டின மாடுகள்

இக்கால்நடை பூங்காவில், கால்நடைப் பண்ணை வளாகம், பால் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி வளாகம், மீன்வள செயல்முறை வளாகம், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான முதுகலை படிப்பு வளாகம், நீட்டிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு வளாகம், ஆராய்ச்சி வளாகம், வணிக அடைகாக்கும் மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு வளாகம், இறைச்சி உற்பத்தி மற்றும் செயலாக்க வளாகம், தீவன ஆராய்ச்சி மண்டலம், பொதுத் தொடர்பு மண்டலம் மற்றும் பொதுவான வசதியின் கீழ் நிர்வாக அலுவலகம், குடியிருப்பு, மாணவர் விடுதி, சர்வதேச விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் இல்லம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இந்தக் கால்நடை பூங்காவில் நாட்டின மாடுகள், நாட்டின நாய் இனங்கள் மற்றும் நாட்டுக்கோழி இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும்.

பிப்ரவரியில் முடியும்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகள் வரும் பிப்ரவரியில் முடிக்கப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

கால்நடைப் பூங்காவுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.270 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், கோவை மண்டல ஐஜி பெரியய்யா, எஸ்பி தீபா காணிகர், கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மருதமுத்து, சின்னதம்பி, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *