சென்னை, மார்ச் 20–
சேலத்தில் ரூ. 880 கோடி செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் மத்திய, மாநில அரசுகள், தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடன் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. 76,356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 200ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், 1.64 இலட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சேலத்தில்
ஜவுளி பூங்கா
அண்மையில் முதலமைச்சர், மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும்
ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1,800 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகளுடன் ஜவுளிப் பூங்கா அமைத்திட 1,052 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்தப் பூங்காவின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஜவுளிப் பூங்காவின் மூலம் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கைத்தறிப்
பூங்காக்கள்
கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும்.
மேலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் மதிப்பு தொடரின் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணிநூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும்.
நடுத்தரத்
தொழில் நிறுவனங்கள்
அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வது இன்றியமையாததாகும். இத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு மேற்கொள்ளும். பெரிய தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களையும் இணைத்து, ஒருங்கிணைந்த தரவுதளம் ஒன்றை ஏற்படுத்த இந்த முயற்சி வழிகோலும். இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில் வளர்காப்பகங்கள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. காலநிலைத் தொழில்நுட்பம், ஊரகத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற விழையும் தொழில் வளர்காப்பகங்களை ஆதரிக்கும் நோக்கில், உயர்நுட்ப மையங்களை அமைக்க புத்தொழில் தமிழ்நாடு இயக்கம் உதவும். தொழில் வளர்காப்பகங்கள் நிதி திரட்டிட உதவுவதுடன்,
40 சதவீத மானியமும் வழங்கப்படும். மாநிலத்தில் தொழில் வளர்காப்பகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த புத்தொழில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படும்.
முதல் தலைமுறை
தொழில் முனைவோர்
இவ்வாண்டு, முதல் – தலைமுறை தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில், 144 கோடி ரூபாய் அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டச் செயல்பாட்டில் இது ஒரு புதிய மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன். குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் பணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய ‘மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி’ (TReDS) தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவதைக் கட்டாயமாக்கியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். இம்மதிப்பீடுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 1,509 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.