வாழ்வியல்

செவ்வாய் சென்ற ஆய்வு கலம் பதிவு செய்துள்ள காற்றின் ஓசை!

செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையை, நாசாவின் ஆய்வுக் கலத்தில் உள்ள பிரிட்டன் சாதனம் பதிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய ‘இன்சைட் லேண்டர்’ ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்று செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது.

ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார்.

“இன்சைட் ஆய்வுக் கலம் தமது காதுகளைக் கூர்மையாக வைத்துக் கேட்பதைப் போன்றது இது”. இந்த காற்றால் ஏற்பட்ட அதிர்வை கொடிக் கம்பத்தில் உள்ள கொடி காற்றில் அசைவதுடன் ஒப்பிடுகிறார்.

காற்றை இடைமறித்து கொடி அசையும்போது அலைவரிசையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு அதனை மனிதக் காதுகளால் கேட்க முடிகிறது. இதையே கொடி படபடக்கிறது என்கிறோம் என்கிறார் அவர்.

இன்சைட் ஆய்வுக் கலத்தில் உள்ள அழுத்தத்தை உணரும் கருவியும், காற்று கடந்து போனதைப் பதிவு செய்துள்ளது. வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி இந்த காற்று வீசும் வேகம், விநாடிக்கு 5 முதல் 7 மீட்டர் வேகத்தில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

இந்த திசையில் காற்றுவீசும்போது விட்டுச் சென்ற தூசுப் படிமங்கள் இருப்பதைக் காட்டும் படங்கள் சொல்லும் செய்தியுடன் இந்தக் கண்டுபிடிப்பும் ஒத்துப் போகிறது.

ஆறு மாத காலம் பயணித்து செவ்வாய்க்கு சென்ற இந்த ஆய்வு வாகனம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது. அத்துடன் இது செவ்வாயின் சுற்றுப்புறங்களையும் ஆராய்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *