சென்னை, மே 27–
பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் தனியாக சந்தித்து பேசினார்கள்.
பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வழி அனுப்பினார்.
அதன்பிறகு அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் அண்ணா தி.மு.க. தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்று இருப்பதால் பிரதமர் மோடியும், அண்ணா தி.மு.க. மூத்த தலைவர்களும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது. 2024–-ம் ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்போதே பணியாற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில் அண்ணா தி.மு.க. தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ‘உங்களுக்குள் இருக்கும் மனக்குறைகளை மனம் விட்டு பேசி தீருங்கள். இருவரும் இணைந்து செயல்படுங்கள். அதுதான் அண்ணா தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லது’ என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது.
தலைமை மீது நம்பிக்கை வராவிட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். மக்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அந்த 10 நிமிடமும் அண்ணா தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்வதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது.
முன்னதாக விழாவுக்கு வந்த போது விமான நிலையத்தில் வரவேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியின் கையை இறுக பிடித்து கொண்டு தோளில் கை வைத்து கொண்டே பார்த்து ரொம்ப நாள் ஆச்சே… எப்படி இருக்கீங்க என்று உரிமையுடன் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.