அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேருந்தில் பயணம்
சென்னை, நவ. 26–
சென்னை மாநகரப் பேருந்துகளில், அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிக்கும் வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
சென்னை பல்லவன் இல்லத்தில், ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு, அடுத்த பேருந்து நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடும் வசதி கொண்ட பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிறகு, இந்த வசதி கொண்ட பேருந்தில் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். பாரிமுனை வழியாக தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் வரை பயணம் செய்து அதன்பிறகு இறங்கி கொண்டனர்.
பேருந்து நிறுத்த அறிவிப்பு
முதற்கட்டமாக குறிப்பிட்ட பேருந்துகளில் ஒலிப்பான்கள் அமைக்கப்பட்டு அடுத்து வரும் பேருந்து நிறுத்தங்கள் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கு அறிவிக்கும் வசதி இன்று முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் எனப்படும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, பேருந்து நிறுத்தம் தொடர்பான ஒலிப்பான் மூலம் அறிவிக்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இது விரைவில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பேருந்து நிறுத்தத்துக்கு 300 மீட்டருக்கு முன்னதாக, அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் ஒலிப்பான்கள் மூலம் அறிவிக்கப்படும் வசதியால், புதிதாக ஒரு வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.