செய்திகள்

சென்னையில் 2 நாள் நாட்டியம் ‘தாள சரித்திரம்’ இசை விழா: நாளை வைஜெயந்தி மாலா துவக்குகிறார்

சென்னை, மே.27–

சென்னையில் பிரபலமான மானசி ஆர்ட்ஸ் அகாடமியும், மும்பையில் பிரபலமான எம் எஸ்எம்ஏபி என்னும் அறக்கட்டளையும் இணைந்து ஐக்கியம் 2022 என்னும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியையும், கர்நாடக இசை நிகழ்ச்சியையும் நடத்துகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நாளை (28ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம்.

பிரபல நாட்டிய மேதை டாக்டர் வைஜெயந்திமாலா பாலி, லீலா சாம்சன் மற்றும் இசைப் பேரொலி சாந்தி சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவை துவக்கி வைக்கிறார்கள். அதையடுத்து 1 மணி நேரத்திற்கு மேகனா எல். என். ராஜுவின் நிகழ்ச்சி, அடுத்து வரும் ஒரு மணி நேரத்திற்கு ஸ்ருதி பிரியா ரவி மற்றும் பவஜன் குமார் நிகழ்ச்சி. அதனை அடுத்து குரு நந்திதேவா எனும் தலைப்பில் அர்ச்சனா மகேஷ் குழுவினரின் (ஸ்ரீ ஞான முத்ரா) நடைபெறுகிறது.

2ம் நாள் (29ந் தேதி) நிகழ்ச்சியை பிரபல நாட்டிய மேதைகள் வி.பி. தனஞ்செயன் – சாந்தா தனஞ்செயன், இசை ஆய்வறிஞர் நந்தினி ரமணி துவக்கி வைக்கிறார்கள்.

மாலை 5.30 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு தாள சரித்திரம் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மானசி ஆர்ட்ஸ் அகாடமி நிர்வாகி காயத்ரி சசிதரனின் மாணவர்களும், கிருஷ்ணாஞ்சலி அகாடமியின் நிர்வாகி பாலகுருநாதனின் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இரவு 7 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு அபா என்னும் தலைப்பில் ராமாயணம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. பெங்களூரில் உள்ள புன்யா டான்ஸ் கம்பெனி நிர்வாகிகள் பர்ஷ்வந்த் உபாத்யே, ஸ்ருதி கோபால் மற்றும் ஆதித்யா ஆகியோர் இந்த நாட்டிய நாடகத்தை தயாரித்து வழங்குகிறார்கள்.

நாடு முழுவதுமுள்ள நடனப் பள்ளிகளின் குரு மற்றும் மாணவர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக ஆண்டுதோறும் ஐக்கியம் எனும் தலைப்பில் கலைஞர் சசிதரன் நடத்தி வரும் நிகழ்ச்சி இது. இவர் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர். ஜேசுதாசின் பிரதான சீடர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டும் – பரதம் கலைக்கு சசிதரன் தம்பதி அரும்பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.