செய்திகள்

சென்னையில் தப்பி ஓட முயன்ற ரவுடி: துப்பாக்கி சூடு நடத்தி மடக்கிப் பிடித்த பெண் சப்–இன்ஸ்பெக்டர்

சென்னை, பிப். 22–

சென்னையில் நேற்றிரவு 2 போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓடி முயன்ற ரவுடியை பெண் சப்–இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தார்.

சென்னையில் ரவுடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தினமும் வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் செல்லும் சந்தேக நபர்களை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் போலீசார் அவர்களில் குற்றவாளிகள் யாராவது இருந்தால் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை அயனாவரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யா என்கிற பெண்டு சூர்யா போலீசில் சிக்கினான். அவனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். அப்போது ரவுடி சூர்யா திடீரென போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டான். தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கரின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சூர்யா தப்பி ஓடி விட்டான்.

சென்னை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி சூர்யா மற்றும் அவனது கூட்டாளிகளான கவுதம், அஜித் ஆகிய 3 பேர் மீது அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கவுதம், அஜித் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் சூர்யா மட்டும் தலைமறைவாக இருந்தான்.

திருவள்ளூரில் சுற்றி வளைத்து கைது

இந்த நிலையில் சூர்யா திருவள்ளூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். நியூ ஆவடி ரோடு வழியாக போலீஸ் ஜீப்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, ஏட்டு சரவணகுமார், காவலர்கள் அமானுதீன், திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சூர்யாவை அழைத்து வந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் அயனாவரம் நியூ ஆவடி ரோடு வேலங்காடு பகுதியில் போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தபோது சூர்யா, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினான். இதையடுத்து ஏட்டு சரவணகுமார், காவலர் அமானுதீன் ஆகியோர் போலீஸ் ஜீப்பில் இருந்து அவனை இறக்கி சிறுநீர் கழிக்க அழைத்துச் சென்றனர்.

கால் முட்டியில் குண்டு பாய்ந்தது

அப்போது ரவுடி சூர்யா மீண்டும் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டான். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர்கள் சரவணகுமாரையும், அமானுதீனையும் வெட்டினான். இதில் சரவணகுமாருக்கு வலது முழங்கை, இடது காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அமானுதீனுக்கு இடது முழங்கையில் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதனை பயன்படுத்திக்கொண்டு ரவுடி சூர்யா நைசாக அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். இதைப் பார்த்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா அதிர்ச்சி அடைந்தார். அவர் சூர்யாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அவனது இடது கால் முட்டியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து ரவுடி சூர்யா அங்கேயே சுருண்டு கீழே விழுந்தான்.

பின்னர் இதுபற்றி உடனடியாக மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று வெட்டு காயம் பட்ட போலீசாரையும், குண்டு காயம் அடைந்த ரவுடி சூர்யாவையும் மீட்டனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சூர்யாவும், 2 காவலர்களும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *