செய்திகள்

சென்னையில் தடைசெய்யப்பட்ட 3.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.19 லட்சம் அபராதம்

சென்னை, பிப்.12–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5.1.2023 முதல் 2.2.2023 வரை 3 ஆயிரத்து 499 கிலோ கிராம் (3.5 டன்) தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19 லட்சத்து 26 ஆயிரத்து 500 – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை அழகுபடுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்து பவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5.1.2023 முதல் 2.2.2023 வரை மாநகராட்சி அலுவலர்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 20 ஆயிரத்து 123 இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5,409 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3498.81 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19 லட்சத்து 26 ஆயிரத்து 500 – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *