நாடும் நடப்பும்

சுற்றுலா சொர்க்க பூமி தமிழகம்!


இன்று உலகெங்கும் சர்வதேச சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையின் உத்தரவால் உருவான உலக சுற்றுலா அமைப்பு எல்லா நாடுகளிலும் சுற்றுலா பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகளும் செய்து வருகிறது. அந்த அமைப்பு தான் செப்டம்பர் 27–ந் தேதியை உலக சுற்றுலா தினமாக கொண்டாடுகிறது.

சுற்றுலா என்ற பேச்சு ஆரம்பித்து விட்டாலே குடும்பத்தார் அனைவரும் புது உற்சாகத்துடன் ‘எங்கே போவது’ என பேச ஆரம்பித்து விடுவார்கள். சிறுவர்களும் பெரியவர்களும் தேர்வு செய்த பட்டியலைக் கொண்டு பட்ஜெட்டை மனதில் அசை போட்டபடி எங்கு செல்வது? என்பதை முடிவு செய்வோம் அல்லவா? அது கடந்த 15 மாதங்களாகவே தடைபட்டு விட்டது. காரணம் கொரோனா பெரும் தொற்று.

கொரோனா பெரும் தொற்று காரணமாக மிகப்பெரிய பாதிப்பு சுற்றுலாத் துறைக்குத் தான்! காரணம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் யாரும் வெளியே செல்லவில்லை. பஸ், ரெயில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலும் தடைபட்டு விட்டது.

மேலும் வெளிநாடுகளில் நாம் சென்றால் அனுமதிப்பார்களா? அவர்களைக் கண்டு நாமும் பயந்து தள்ளியே நிற்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் உணவகங்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் அங்காடிகள், சிறுவர் பூங்காக்கள், உல்லாச சவாரிகளுடனான சிறுவர் மனமகழ் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், இனிப்பகங்கள் என பல்வேறு சுற்றுலாத் துறையின் அச்சாணிகள் நகர வழியின்றி ஸ்தம்பித்து நின்று விட்டன.

நடப்பு மாதத்தில் நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

எல்லா நாடுகளிலும் பெருவாரியான மக்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட்டனர்.

இந்தக் காரணங்களால் சுற்றுலாத் துறையும் மெல்ல எழுந்து மழலை நடை போடத் துவங்கி விட்டது.

அடுத்த சில வாரங்களில் அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பல அமைப்புகள் அங்குள்ள நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு கொள்கை தளர்வுகளை அறிவித்து வருகிறார்கள்.

ஆனால் இந்தியாவின் நிலை தான் தர்ம சங்கடமாகவே இருக்கிறது.

இங்கு நம்மால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஓய்வாக பிரயாணம் மேற்கொள்ள வழியில்லை.

நம் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து 99 சதவிகிதம் குறைந்திருக்கும்! கொரோனாப் பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தாலும் கொரோனாப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வுகளை அறிவிக்க அரசுகள் தயங்குவதும் ஏன்? என்ற காரணமும் புரிகிறது.

பல நகரங்ளுக்கு வருவாய் பெருவாரியாக சுற்றுலாத் துறை சார்ந்ததாகவே இருக்கிறது. விடுமுறை சுற்றுலா பகுதிகளில் ஆள் நடமாட்டம் மிக சொற்பமாக இருப்பதால் பல சுற்றுலாப் பயணிகளை நம்பி நடந்துகொண்டிருந்த ஓட்டல்கள், உணவகங்கள், மனமகிழ் அம்சங்கள் எல்லாமே மூடப்பட்டு மீண்டும் இயங்க வழியின்றி தவிக்கின்றனர்.

தமிழகத்தில் சென்னைக்கு ஒரு சிறப்பு உண்டு, அது தான் வருடா வருடம் அதிகரித்து வந்து கொண்டிருந்த சுற்றுலா வருவாய்!

சென்னையின் சுற்றுலா வருவாயை அதிகரிக்க அரசு பெரியதாக விளம்பர செலவுகளையும் செய்யவில்லை. ஆகவே தற்போதைய நெருக்கடி தனியார் அமைப்புகளுக்கு தான்!

மருத்துவ சேவைத் துறை வருமானம் இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் வீழ்ச்சியை காணாததால் மொத்தத்தில் சென்னையின் பொருளாதாரம் வீழ்ச்சியை காணவில்லை.

ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுமே நம்பி இருக்கும் கடற்கரை ரிசார்ட்ஸ், 5 நட்சத்திர ஓட்டல்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழகமெங்கும் சுற்றுலா புரட்சி ஏற்பட்டால் தான் மொத்த சுற்றுலாத் துறையும் நிமிர்ந்து நடை போட முடியும்.

வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பயணிக்காத உள்ளூர் மக்கள் அவர்கள் விரும்பும் அனைத்து உல்லாச சமாச்சாரங்களும் நம் மாநிலத்திலேயே இருப்பதை விளம்பரப்படுத்தியாக வேண்டும்.

வைகை, வால்பாறை, சோலையாறு அணைக்கட்டு பகுதியில் உள்ளவை அனைத்தும் வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது என்பதை மறந்து விடக்கூடாது.

மலைப்பிரதேச சுற்றுலாவுக்கு பிரசித்தமான கொடைக்கானல், ஊட்டிக்கு இணையாக ஆனைமலை, வால்பாறை, ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதிகம் பேருக்குத் தெரியாத மேகமலை போன்ற புதுப்புது மலைப்பகுதிகளை வைத்து உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவர்ந்து சுற்றுலா பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பாக செயல்பட வைத்து விடலாம்.

அருவி என்றால் குற்றாலம் என்பது உண்மை தான். சுருளி அருவி, அகத்தியர் நீர்வீழ்ச்சி போன்ற பலவற்றை கொண்டு சுற்றுலாத் துறைக்கு புதிய வேகத்தைத் தந்து விடலாம்.

இந்தச் சிறு சிறு சுற்றுலா பகுதிகள் ரெயில் பிரயாண தூரத்திலும் விமானத்தில் பயணித்தும் சென்று விடும் தூரத்தில் இருப்பதால் இவை உள்ளூர் சுற்றுலா பிரியர்களுடன் அக்கம் பக்கம் உள்ள மாநிலத்தில் இருந்தும் பலர் வர ஈர்ப்பு இருக்கும்.

இதுபோன்ற சிறுசிறு சுற்றுலாப் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை கணக்கெடுத்து அவற்றை சீர் செய்து விட்டால் அது தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புது சக்தியை தந்து புதிய உச்சத்தை எட்ட பயணத்தைத் துவங்கி விடும்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *