செய்திகள்

சுகுணாபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான மயானம் : அமைச்சர் வேலுமணி வழங்கினார்

கோவை, பிப்.7–

குனியமுத்தூரைச் சேர்ந்த மாணவிக்கு கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட முகமதிய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கபர்ஸ்தான் (மயானம்)ஐ முகமதியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கபர்ஸ்தான் (மயானம்) முகமதியர்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் வரவேற்புரை வழங்கினார்.

வசதிகள் என்னென்ன?

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.91 சுகுணாபுரம் மேற்கு பாலக்காடு பிரதான சாலை மேற்கு பகுதியில் அமையவுள்ள புறவழிச் சாலை அருகில் சுமார் 1.75 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 508 மீட்டர் நீளத்தில் சுற்றுச் சுவர், 246 மீட்டர் நீளத்தில் நடைபாதை, 600 சதுர அடி பரப்பளவில் தொழுகைக் கூடம், கூடுதலாக 1020 சதுர அடி பரப்பளவில் முன்புற நிழற்கூரை, மின் வசதி, தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஆகிய கட்டுமானப் பணிகளுடன் அமைக்கப்பட்டுள்ள முகமதியர்களின் கபர்ஸ்தான் (மயானம்)ஐ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைத்து முகமதியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் முகமதியர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த சலீம் என்பவரின் மகள் எஸ்.அப்ரின் என்ற மாணவிக்கு கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவ சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவருமான சிடிசி.ஜபார், கோவை மாவட்ட கொள்கை கூட்டமைப்பின் பொது செயலாளர் ஹினாயத்துல்லா, ஜமாத் நிர்வாகிகள் நூர்சேட் கமால், அப்துல் ஜப்பார், பசீர், எம்கேஎஸ்.சகாப்தீன், அய்யூப், எம்.ஜே.கே மாநில நிர்வாகி சுல்தான் அமீர், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏ.நாசர், மாவட்ட நிர்வாகிகள் எச்.எஸ்.பாவா, பகுதி செயலாளர்கள் மதனகோபால், ரபீக், நிர்வாகிகள் கரும்புக்கடை முஜி, குஞ்சாலி, ஹிழர் மற்றும் அனைத்து முகமதிய பெரியோர்கள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *