செய்திகள்

சீக்கிய அதிகாரிக்கு முதன்முறையாக அமெரிக்க கடற்படையில் டர்பன் அணிய அனுமதி

நியூயார்க், செப். 28–

அமெரிக்க கடற்படையில் முதன் முறையாக சீக்கிய அதிகாரி ஒருவருக்கு ‘டர்பன்’ அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான சுக்பீர், அமெரிக்க கடற்படையில் 2017 இல் சேர்ந்தார். இதையடுத்து அவர் தன் மத வழக்கப்படி டர்பன் எனும் தலைப்பாகை அணிந்து பணியாற்ற விண்ணப்பித்தார். ஆனால் ‘ போர் முனையில் சீருடை வேறுபாடு, கடற்படை வீரர்களின் ஒழுக்கம் ஒற்றுமை ஆகியவற்றை பாதித்து, தோல்விக்கு வழி வகுத்து விடும்’ எனக் கூறி, டர்பன் அணிய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் சுக்பீர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து டர்பன் அணிய அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பித்தார். இந்த முறை அவரின் கோரிக்கை சில நிபந்தனைகளுடன் ஏற்கப்பட்டுள்ளது.

246 ஆண்டில் முதல்முறை

இதையடுத்து அமெரிக்க கடற்படையின் 246 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக டர்பன் அணிந்து பணியாற்ற அனுமதி பெற்ற அதிகாரி என்ற சிறப்பை சுக்பீர் பெற்றுள்ளார். எனினும் நிபந்தனைப்படி சுக்பீர் வழக்கமான பணியின் போது மட்டுமே தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார். போர் முனையில் பணியாற்றம்போது, தலைப்பாகை அணிய அனுமதி இல்லை. அதுபோல பொதுமக்கள் பங்கேற்புடன் நடக்கும் கடற்படை நிகழ்ச்சிகளிலும், சுக்பீர் டர்பன் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளையும் நீக்கக் கோரி முறையிடப் போவதாக சுக்பீர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப் படையில் 100 சீக்கியர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் மத வழக்கப்படி தாடி வளர்க்கவும் டர்பன் அணியவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை தற்போது கடற்படைக்கும் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *