போஸ்டர் செய்தி

சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா: எடப்பாடி அடிக்கல்

Spread the love

சேலம், பிப்.9–
சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.1022 கோடியில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விவசாய பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கட்ட பூமிபூஜை நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இரண்டாவது செங்கல்லை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வைத்தார். மூன்றாவது செங்கல்லை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எடுத்து வைக்க தொடர்ந்து அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் செங்கல் எடுத்து வைத்தார்கள். இதன்பின் பூஜைகள் நடந்தன.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, பூமிபூஜை முடித்ததும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர்.
மேடைக்கு செல்லும் வழியில் பல்வேறு வகையான மாடுகளை பார்த்தார். வாஞ்சையுடன் மாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவனம் கொடுத்தார்.
விழா மேடை அருகே வந்ததும் அங்கு அளிக்கப்பட்ட போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை
பின்னர் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பின் விழா துவங்கியது.
ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கான முத்திரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதேபோன்று கால்நடை பூங்கா மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலாளர் க.சண்முகம், வரவேற்புரையாற்றினார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, விவசாய பெருவிழா குறித்து விளக்கவுரையாற்றினார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், திட்ட விளக்கவுரையாற்றினார். சேலம் மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன் நன்றி கூறினார்.
கண்காட்சியை
திறந்தார்
விழாவிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடிமக்கள் கால்நடை வளர்ப்பு முறை, நாட்டினங்களை பாதுகாத்தல், நாட்டு பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் ஆகியவற்றையும் அதே போன்று விவசாயத்தில் என்னென்ன புதிய ரகங்கள் உள்ளன என்பதையும், அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பயன்கள் குறித்தும், நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கமும் செய்து காண்பிக்க ஏதுவாக 224 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
3 லட்சம் பேர்
வருவார்கள்
அந்த கண்காட்சி அரங்கில் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நவீன யந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அரங்கும், ஒவ்வொரு விதமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் மூலமாக சுமார் 3 லட்சம் பொதுமக்கள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 பிரிவுகள்
மூன்று பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள், மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படுகிறது. இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும்,
மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கப்படுகிறது.
இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களுக்கும், அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகள் ஏற்படுத்துப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும்.
5வது கால்நடை
மருத்துவ கல்லூரி
தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி தமிழகத்தில் அமைய உள்ள 5வது கால்நடை மருத்துவ கல்லூரி ஆகும். இந்த கல்வி ஆண்டு முதல் இந்த கல்லூரி செயல்படும். அதாவது 2020–21–ம் ஆண்டில் கல்லூரியில் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 2021–22–ம் ஆண்டில் 60 மாணவர்களும், 2022–23–ம் ஆண்டு 80 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என்று விழாவில் பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *