ஆர். முத்துக்குமார்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அல்லவா? தமிழக கனிம வளத்துறை அப்படிப்பட்ட நடப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக முற்றிலும் முடங்கி இருக்கும் ஒரு பெரிய வர்த்தகத் துறை தமிழகத்தில் முடங்கி இருக்கிறது. 2012ல் வெளிச்சத்திற்கு வந்த ரூ.16,000 கோடி ஊழலில் சில சுரங்கங்கள் மூடப்பட்டது, சில முதலாளிகள் சரணடைந்தனர். அது மட்டுமா? பல அரசு அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதற்காக மதுரை, சிவகங்கை பகுதி சுரங்கங்கள் முற்றிலும் இன்று வரை மூடியே இருக்கிறது. அதாவது ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட ரூ.16,000 கோடி இழப்பை விட வருவாய் இன்றி மேலும் பல லட்சம் கோடி வருவாய் இழப்புடன், பல தொழிலாளர்கள் பணிக்கு செல்லாத நிலையில் ஏழ்மையில் தவிக்கின்றனர்.
மீண்டும் தவறுகள் ஏற்பட்டால்? என்ற அச்சம் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கலாம். அதுபோன்ற தவறுகள் ஏற்படாத கட்டுப்பாடுகள் கொண்ட திட்ட வரைவை உருவாக்கி இத்துறை மீண்டும் முழு வீச்சில் பணியாற்ற வைப்பது அவசியமாகிறது.
தமிழகத்தில் சர்வதேச அளவில் நம் கற்களுக்கு மதிப்பூட்டல் செய்து வரும் ஜெம் கிரானைட்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு இத்துறையின் மீட்சிக்கு உறுதி தர வேண்டும்.
கிரானைட் கற்கள் பல டன்கள் எடை உடையது அல்லவா? அதை அரசு கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது, அதை உறுதி செய்து விட்டு மீண்டும் செயல்பட வைத்தால் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறைந்தது ரூ.30,000 கோடி வருவாய் வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தக் கட்டத்தில் தமிழக கடற்கரையோர கனிம வளங்களை சந்தை படுத்த ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி இருப்பது இத்துறைக்கு நல்ல செய்தியாகும்.
கடற்கரை ஓரங்களில் கிடைக்கும் கனிமவளத்தை வணிகரீதியில் பிரித்து எடுத்து, சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனம், ஐஆர்இஎல் (இந்தியா) நிறுவனம் இடையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞான ரீதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடாத வாறும் எடுக்க வேண்டும், அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தைப் பெருக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையாகும்.
கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஐஆர்இஎல் (இந்தியா) நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு கனிம நிறுவனமும் இணைந்து, தமிழகத்தின் தென் மாவட்ட கரையோர கனிம வளங்களை, குறிப்பாக கார்னட், இலுமினைட், ஜிர்கான், ரூட்டைல் போன்ற கனிமங்களை பிரித்து எடுத்து, சந்தைப் படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதே வேகத்துடன் தமிழக கிரானைட் தொழில் மீண்டும், முழு வீச்சில் இயங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கும் தொழிலதிபர்களுக்கு வழி பிறக்கும் என்று காத்திருக்கிறார்கள்.