கரூர், ஜன. 5–
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே இன்று காலை டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் மாரியப்பன். இவர்கள் இருவரும் மாடு வாங்குவதற்காக டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
2 பேர் பரிதாப பலி
அப்போது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்கு பை ஏற்றிய லாரி ஒன்று மாயனூர் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, டாட்டா ஏஸ் லோடு வாகனமும், லாரியும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சரவணன் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த இருவரின் உடலையும் ஒரு மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர். பின்னர், உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.