செய்திகள்

சமையல் எரிவாயு திட்டத்தால் பெண்களின் இறப்பு குறையும்

டெல்லி, ஏப். 19–

மத்திய அரசின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தால், ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் மூலம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு, இலவச எல்.பி.ஜி. இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. விறகுகள் போன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்களை வீட்டுக்குள் சமையலுக்குப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் 6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தால், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுவதாக டெல்லி ஐஐடி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இறப்பு தடுக்கப்படும்

இதுகுறித்து அந்த ஆய்வில், “இந்தியாவில் வீட்டுக்குள் உருவாகிற காற்று மாசுபாட்டை முற்றிலுமாகத் தடுத்துவிட்டால், சுமார் 18.7 கோடி பேர் சுத்தமான காற்றைச் சுவாசிப்பார்கள். சமையலுக்கு அடுப்பு எரிக்கப் பயன்படுத்தப்படும் நிலக்கரி, விறகுகள், மண்ணெண்ணெய் விளக்குகள் ஆகியவை வீட்டுக்குள் உருவாகிற காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

இந்த திட்டத்தால், வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசுபாடு குறைந்து, ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய சுகாதார சீர்கேடாக உள்ளது. இந்தியாவில் 77 விழுக்காட்டினர் மாசடைந்த காற்றைச் சுவாசிக்கின்றனர்” என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *