சிறுகதை

சமுதாயப் பொறுப்புணர்ச்சி – மு.வெ.சம்பத்

ரமணி கீதாவிடம் நாம் வளர்த்த மகன் சந்துரு.

அவன் அழுது கொண்டு பள்ளியில் சேர்த்தது இப்போது தான் போலிருக்கிறது. அது மறக்கவில்லை. அதற்குள் அவன் படிப்பை முடித்து விட்டு தற்போது மருத்துவராக செல்கிறான்; நாட்கள் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை என்றார் ரமணி.

கீதாவிடம் இருந்து பதிலாக புன்னகை ஒன்றே வெளிவந்தது.

ரமணி கீதாவிடம் மறந்தே போச்சு, ஒரு மணி நேரம் முன்பு தான் ராமமூர்த்தி தொடர்பு கொண்டார். நமது பையனை அவர்கள் வீட்டில் பெண் உள்பட எல்லோருக்கும் பிடித்திருக்கிறதாம். மேற்கொண்டு எப்போது பேசலாம் என்றார். உடனே கீதா நமது பையன் வரட்டும் கலந்து ஆலோசித்து முடிவு கூறலாம் என்றாள்.

சந்துரு வந்ததும் கீதா திருமண விஷயம் பற்றிக் கூற, அவன் நீங்கள் பெண்ணைப் பற்றி நன்கு விசாரித்தீர்களா? உங்களுக்கு சம்மதம் என்றால் நல்லது. மற்றபடி வரதட்சணை, நகைகள், ஆடம்பர திருமணம் எதுவும் நம் கோரிக்கையாக இருக்கக் கூடாது. எளிமையான முறையில் குறிப்பிட்ட நபர்களுடன் திருமணம் நடந்தால் நல்லது. அந்தப் பெண் நமது குடும்பத்துடன் ஒன்றி, நமது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழ்ந்தால் நலம் என்றார்.

பின் இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணத்திற்கு ஒரு நல்ல நாள் குறித்தனர்.

இதற்கு நடுவில் நாடெங்கும் கொரோனா என்னும் நோய் பரவத் தொற்றிக் கொண்டது. சந்துருவுக்கு சுழற்சி முறையில் கொரோனா வார்டு தரப்பட்டது. ரமணியும் ராமமூர்த்தியும் சந்துருவுக்கு ஏதும் ஆகக்கூடாது என தெய்வத்தை வேண்டிக் கொண்டனர்.

சந்துரு தனக்குக் கொடுத்த பணியில் சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயரெடுத்தார். ஆனால் சந்துரு குடும்பத்தை விட்டு நிறைய நாட்கள் பிரிந்து இருக்க வேண்டியதானது.

திருமண நாள் நெருங்கையில், தனிமைப் படுத்தும் நாட்கள் முடிந்ததும் திருமண அழைப்பிதழோடு விடுமுறை விண்ணப்பம் செய்து அனுமதியும் பெற்றார்.

சந்துருவின் விருப்பப்படி எளிமையான முறையில் குறைந்த எண்ணிக்கையில் சுற்றம் சூழ திருமண விழா தொடங்கியது.

மணமேடையில் மணமகள் மல்லிகா தான் வாங்கியிருந்த தங்கச் செயினை மாப்பிள்ளைக்கு அணிவிக்க முயற்கையில் அவளது அம்மா வந்து அதை தடுத்து அவர்கள் தான் எதுவுமே வேண்டாமென சொன்னார்களே, இதைப் பார்க்கையில் மாப்பிள்ளை உன்னிடம் தனியாகப் பேசி வாங்கச் சொன்னாரா என்று கூறி அந்த நகையை அவனிடமிருந்து பிடுங்கினாள். அங்கு ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில் சந்துரு மைக்கை கொண்டு வரச் சொல்லி பேசஆரம்பித்தார். இந்த ஆபரண விஷயம் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் தந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றார். நான் அவர்களிடமிருந்து சில உறுதி ஒப்பந்தம் பெற வேண்டிய நிலையில் உள்ளேன் என்றார்.

நான் எங்களது குழுவுடன் சேர்ந்து இந்த கொடிய நோய்த் தாக்கம் குறையும் வரை பணி புரிய மணமகள் மற்றும் அவர் குடும்பத்தார் ஒத்துக் கொள்ள வேண்டும். பின்னால் ஏதும் பேச்சு மாறக் கூடாது என்றார். நான் சில வருடங்கள் கழித்து அவர்கள் ஊரில் ஒரு மருத்துவமனை ஒன்று கட்டி, நானும் என்னுடன் கை கோக்கப் போகும் மல்லிகாவும் மக்களுக்கு குறைந்த செலவில் வைத்தியம் செய்வோம் என்றார். ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று இலவச மருத்துவ சேவை செய்வோம். இது உறுதியென்றார்.

அங்கு சில நிமிடங்கள் அமைதி நிலவ, பெண் வீட்டார் நாங்கள் அவர் கூறும் கூற்றுக்கு சம்மதம் தெரிவிக்கிறோம் எனக் கூற வந்திருந்த உறவினர் ரமணியைப் பார்த்து, சமுதாயப் பொறுப்புணர்ச்சி உன்னிடம் மட்டுமல்ல உன் பையன் இரத்தத்திலும் ஊறியிருக்கிறது என்றனர்.

மாங்கல்ய தாரணத்திற்கு நேரமாகிறது என்ற குரல் எல்லோரையும் மேடையை நோக்கி பார்க்கச் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *