செய்திகள்

சமவாய்ப்பு கொள்கை எதிரொலி: பொதுத்துறை – தனியார் துறைகளில் 533 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை

நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தகவல்

சென்னை, மார்ச் 31–

முதலமைச்சரின் வழிகாட்டுதலில், 2021 டிசம்பர் முதல் முதற்கட்டமாக தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் நடத்திய சமவாய்ப்பு கொள்கை விழிப்புணர்வு கூட்டங்களின் மூலம் 3165 நிறுவனங்கள் சமவாய்ப்பு கொள்கையினை வெளியிட்டுள்ளன. மேலும் 1299 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இப்பணியிடங்களை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நிரப்பிடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல், தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 14 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார மையத்தின் பங்கேற்புடன் 533 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு கோரும் 1935 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்தம் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் பேசுகையில்,

சென்னையில் நம்ம வீடு வசந்த பவன், திருச்சியில் ஐ.டி.சி. நிறுவனம், சேலத்தில் சென்னை சில்க்ஸ், திருநெல்வேலியில் ஓட்டல் ஜானகிராம் மற்றும் கோயம்புத்தூரில் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களில் நேர்காணல்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலன்கள், உரிமைகள் மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் முன்னோடியாக விளங்கி வரும் தமிழகமானது இந்தியாவிலேயே முதன்முறையாக சமவாய்ப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கென இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் இப்பணிகளை துரிதப்படுத்திட மாவட்டந்தோறும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.