செய்திகள்

சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்: போலீசில் ஜெயக்குமார் புகார்

சென்னை, அக். 21-

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அண்ணா தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்த தலைமையின் கீழ் அண்ணா தி.மு.க. செயல்படுகிறது. இது தான் உண்மையான அண்ணா தி.மு.க. என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.

குழப்பம் ஏற்படுத்த முயற்சி

ஆனால் பெங்களூரு சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்து வெளிவந்த சசிகலா, அண்ணா தி.மு.க கொடியை தனது காரில் பயன்படுத்தினார். தற்போது தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில் அண்ணா தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த சசிகலா, அங்கு கல்வெட்டு பதித்து அதில் தன்னை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் என்று கூறி உள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. சட்டவிரோதமானது. கட்சியிலும் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா இவ்வாறு செயல்படுகிறார்.

அண்ணா தி.மு.க.வில் உறுப்பினராக கூட இல்லாத சசிகலாவின் இந்த செயல்பாடு தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். அண்ணா தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சசிகலா தன்னை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் என்று கூறுவதைத் தடுத்து நிறுத்துவதோடு, அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் சசிகலா இவ்வாறு செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அம்மா உணவகத்தை தி.மு.க. அரசு மூடினால், அண்ணா தி.மு.க. சார்பில் அதை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *