செய்திகள்

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக ஒப்படைக்க சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 26–

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர், 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததையடுத்து, அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் குத்தகைதாரர் காலி செய்யாததால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று காலை தொடங்கினர்.

முதலில் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், ஜெ.சி.பி இயந்திரம் மூலம் கடைகளை இடித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் துறை ஆணையர் குமரகுருபரர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

ரூ.600 கோடி நிலம் மீட்பு

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாராக இருக்கிறது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு வருமானம் ஈட்டும் முயற்சியை அறநிலை துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கோயில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளில் வாடகை பணம் வசூலிப்பது குறித்து சட்ட ரீதியான முயற்சிகள் நடத்தப்படும்.

மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் இந்த நிலத்தில் நிறுவனங்கள் கட்டப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *