செய்திகள்

கொரோனா 2வது அலை: இந்தியாவில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி, ஜூன் 6-

கொரோனா 2வது அலையில் கடந்த 4 மாதங்களில் இந்தியா முழுவதும் 646 டாக்டர்கள் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா 2வது அலையின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு பரவிய முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலை வீரியமிக்கதாக உள்ளது.

இதில் அதிகபட்சமாக, கடந்த மாத துவக்கத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிக அளவில் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கு நாடு முழுவதும் இதுவரை 646 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் நீடித்த கொரோனா முதல் அலையில் 748 டாக்டர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், இரண்டாம் அலை தொடங்கிய 4 மாதங்களிலேயே 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலையில், டெல்லியில் அதிக டாக்டர்கள் உயிர் இழந்துள்ளனர். அங்கு இதுவரை 109 பேரும், பீகாரில் 97 பேரும், உத்தரபிரதேசத்தில் 79 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்க்கண்ட்டில் 39 பேரும், குஜராத்தில் 37 பேரும், ஆந்திராவில் 35 பேரும், தெலுங்கானாவில் 34 பேரும், மேற்கு வங்கத்தில் 30 பேரும் உயிர் இழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *