செய்திகள்

கொரோனா பாதித்த மணமகனை பாதுகாப்பு கவச உடை அணிந்து மணமுடித்த இளம் பெண்

திருவனந்தபுரம், ஏப். 26

மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கவச உடை அணிந்து மணமகனை இளம்பெண் திருமணம் செய்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஓர் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது.

சரத்மோன் என்பவருக்கு அபிராமி என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று (25ந் தேதி) திருமணம் செய்ய கடந்த ஆண்டே பெற்றோர் முடிவு செய்திருந்தனர். மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்துவந்த சரத்மோன் தனது திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா திரும்பினார். கொரோனா பாதிக்கப்பட்டிருந்த அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

தாயார் ஜிஜிமொல்னுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், சரத்மோன், அபிராமிக்கு திட்டமிட்ட நாளில் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை மணப்பெண் அபிராமி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.

குடும்பத்தினரின் வேண்டுகோளையடுத்து, அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் (பர்சனல் ப்ரொட்டக்க்ஷன் கிட்) நேற்று சரத்மோன் சிகிச்சை பெற்று வரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமி வந்தார். அங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சரத்மோனை திருமணம் செய்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *