அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கழகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களைப் பயன்படுத்தும் யுக்தி கையாளப்படவுள்ளது.
கொரோனா வைரஸுடன் வரும் பயணிகள் மற்றும் ரசிகர்களைக் கண்டுபிடிக்க நாய்களைப் பயன்படுத்தும் இந்த நடைமுறையை `மியாமி ஹீட்’ எனும் கூடைப்பந்து அணியின் நிர்வாகம் மேற்கொள்கிறது. சர்வதேச அளவில் நாய்கள் கொரோனா வைரஸ்களைக் கண்டுபிடிக்குமா ? என்ற வாதம் இன்னும் முழுமை பெறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“மக்கள் விமானத்திலிருந்து வந்தவுடன் சமூக இடைவெளியுடன் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பார்கள். அப்போது நாய் அவர்கள் அருகே சென்று மோப்பம் பிடிக்கும். யாரையெல்லாம் சாதாரணமாக நாய் கடந்து செல்கிறதோ அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் அர்த்தம். யார் அருகிலாவது நாய் படுத்துக்கொண்டால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்படும். அவர்களுக்குப் பயணத்திற்கான பணத்தைத் திருப்பி செலுத்துவது, சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது உள்ளிட்டவற்றிற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்படுவார். ஆனால், நாய் அடையாளம் கண்ட நபர் விளையாட்டை பார்க்க உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்” என்று மியாமி ஹீட் அணியின் நிர்வாகம் தெரிவித்தது.
“நாய்கள் மூலம் கொரோனா வைரஸைக் கண்டறிவது மட்டுமின்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது, கட்டாய முகக்கவசம், வெளியிலிருந்து கொண்டுவரும் உணவுகளுக்குத் தடை விதிப்பது உள்ளிட்டவற்றையும் நாங்கள் மேற்கொள்கிறோம்” என மியாமி ஹீட் அணியின் பொருளாதார துணைத்தலைவர் மேத்தீவ் ஜாஃபரியன் தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபின்லாந்து இந்த நடைமுறையைப் பயன்படுத்தியுள்ளது. ஹெல்சிங்கி-வாண்டா விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிய அவர்கள் மோப்ப நாய்களைப் பயன்படுத்தினர்.
விமான பயணத்தின்போது பயணிகள் கழுத்தைத் துடைக்கப் பயன்படுத்திய துணிகளை தங்களுக்குமுன் வைத்துக்கொண்டு நிற்பார்கள். எந்தப் பயணியின் துணியை நாய் கவ்வுகிறதோ அவர்களுக்கு கொரோனா இருப்பதாக அறியப்பட்டது. சோதனைகளின் முடிவில் அவர்களுக்கு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.