செய்திகள்

கொரோனா நோயாளிக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் வசூல்:கீழ்பாக்கம் ‘பீ வெல்’ மருத்துவமனைக்கு அனுமதி ரத்து

கொரோனா நோயாளிக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் வசூல்

கீழ்பாக்கம் ‘பீ வெல்’ மருத்துவமனைக்கு அனுமதி ரத்து

சுகாதாரத்துறை நடவடிக்கை

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை, ஆக. 1–

கொரோனா நோயாளியிடம் 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் மருத்துமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளித்து வருகிறது. சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.

கட்டணம் நிர்ணயம்

இந்நிலையில் பொதுமக்கள் நோய் சிகிச்சை காரணமாக அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாதவண்ணம் அரசாணை எண்.240, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை, நாள் 5.6.2020-ன் மூலம் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வழங்கியுள்ளது. கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வு துறையினரால் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வசூல்

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பீவெல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம்- வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், தனியாரது சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பீவெல் மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணவிவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறையால் ஏற்கனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *