சிறுகதை

கொடி – ராஜா செல்லமுத்து

வாடகை வீட்டில் குடி இருப்பது என்றால் அது பெரிய சிக்கல்கள் பிரச்சனைகள், அவமானங்கள், சுயமரியாதை இழப்பு அத்தனைையும் தாங்கித்தான் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சொந்த வீட்டுக்காரர்கள் கொடுக்கும் குடைச்சல், சுவரில் ஆணி அடிக்க கூடாது. இரவு நேரங்களில் லைட் எரியக் கூடாது. வெளிச்சம் இருக்கக் கூடாது. சொந்த பந்தம் என்று யாரும் வரக் கூடாது என்று பல கண்டிஷன்கள் போட்டு வைப்பார்கள்.

அத்தனை இம்சைகளையும் தாங்கிக் கொண்டு தான் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் குடியிருந்து வருகிறார்கள் என்பது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வெளிச்சம்.

காமராஜ் தன் குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதுவும் அவர் இருப்பது இரண்டாவது மாடியில். அவர் வசிக்கும் தெருவில் முதல் மாடி வீடு முடிந்துவிடும் கட்டிடங்கள்,

இவர் இருக்கும் வீடு மட்டும் இரண்டாவது மாடியை தொட்டு நின்றது. இரண்டாவது மாடி மொட்டை மாடியில் ஏறினால் அந்த பகுதியில் உள்ள மொத்த வீடுகளும் தெரியும் அளவிற்கு அவ்வளவு உயரமாக வளர்ந்து நின்றது காமராஜர் குடியிருக்கும் வீடு.

சில நேரங்களில் வானத்தில் செல்லும் விமானத்தைக் கூட விரல் வைத்து தொட்டு விடலாம் என்ற அளவிற்கு இருக்கும். நிலாவும் நட்சத்திரமும் மேகக் கூட்டங்களும் அவர் இரவு நேரம் ரசிக்கப் மறப்பதில்லை. மொட்டைமாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு ஊர்ந்து செல்லும் மேகங்களையும் ஒட்டி வைத்தாற்போல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் நட்சத்திரங்களையும் ஒளிந்து இருக்கும் நிலாவையும் கண்கொட்டாமல் பார்த்து கிடப்பார் காமராஜ்.

இந்த நகரத்தில் வானம் பார்த்து அதன் அழகை ரசிக்கும் மக்கள் ரொம்பவே குறைவு. எத்தனை பேர் பவுர்ணமி ரசித்து இருக்கிறார்கள். எத்தனை பேர் நட்சத்திரங்களை வாசித்திருக்கிறார்கள். எத்தனை பேர் மழையில் நனைந்து இருக்கிறார்கள். வெயிலில் நடந்து இருக்கிறார்கள். எல்லாம் கையிலிருக்கும் பணத்தையும் பையிலிருக்கும் பணத்தையும் வங்கியில் இருக்கும் பணத்தை மட்டுமே நினைத்து ஓடி கரைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் காமராஜ் வாழ்க்கை ஒரு வித்தியாசமானது தான்.

எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மன சுபாவம் உள்ளவர் அதனால் அவரின் வாழ்க்கை ரொம்பவே இலகுவாக இருந்தது.

எதுவும் கடினமாக எடுத்துக் கொள்ளமாட்டார். கடந்து சென்று விடுவார் அப்படி கடந்து செல்லும் சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் அதை மறந்து விடுவார்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் ஒரு உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.

அவர் இரண்டாவது மாடியில் குடியிருக்கிறார். அதற்கு கீழ் ஒரு மாடி அதற்கு கீழ் தளம் முதல் மாடியில் இருக்கும் ஒரு குடும்பம் அவ்வளவாக அவர்களுடன் பரிச்சியம் இல்லை. காரணம் அவர்கள் அதிகாலையிலேயே சண்டை போடும் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் சுமுகம் இல்லாத வாழ்க்கை. ஏதாவது நாம் சொல்லப் போனால் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ? என்று காமராஜ் ஒதுங்கியே இருப்பார்.

காரணம் அவர்களின் குணங்களைக் கண்டதால் அவரது தலை இடுவதே இல்லை.

சிறிது காலத்திற்கு எல்லாம் அவருக்கு கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் மீது கடுமையான கோபம் வந்தது.

காரணம் முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு வரும் படியில் காமராஜர் நடந்து செல்வதற்கு தொந்தரவாக கொடிக்கயிறைக் கட்டியிருந்தார்கள்.

பகல் நேரங்களில் கொடி என்றால் இரவு நேரங்களில் படிகளில் நடந்து வர முடியாமல் பலகை வைத்து அடைத்து விடுவார்கள். எதற்கு இப்படி செய்கிறார்கள்? என்று முதலில் குழம்பி இருந்தார்

அவர்கள் வசிப்பது சொந்த வீடு நாம் இருப்பது வாடகை வீடு எதுவும் கேட்டால் தப்பாக நினைத்து விடுவார்களோ? என்று அவன் உள்ளத்துக்குள்ளே அதை வைத்துக் கொண்டார்.

ஆனால் இரவு நேரங்களில் அவர், வரும்போது படிக்கு மேலே இருக்கும் கொடியை கடந்து போவதும் ரொம்ப சிரமமாக இருந்தது.

ஒரு நாள் இதைக் கேட்டு விடுவது என்று முடிவு செய்து கீழ்தளத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் கேட்டார்.

எதற்கு நடக்கும் பாதையில் பலகை வைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அந்த பெண்மணி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

பெருச்சாளி வருது. அதுதான் பலகை வைக்கிறோம். சரி மேலே எதுக்கு காெடி என்று காமராஜ் கேட்க, அது துணி காயப் போட என்று சொன்னாள்.

இதுவரைக்கும் நீங்கள் துணி காயப் போட்டது இல்லையே ? பிறகு எதற்கு கொடி என்று காமராஜர் கேட்டார்.

இல்ல முன்னாடி எல்லாம் கொடிகட்டி இருந்தோம். நீங்க வரும்போது பொருட்கள் எடுத்து வர என்று தான் எடுத்து விட்டோம் என்றார் அந்தப் பெண்மணி.

அது சரிங்க முன்னாடி யாருமே இல்ல அந்த வீட்டுல இல்ல. இப்ப அடிக்கடி நாங்க நடந்து போகணும் வரணும் .ஏதாவது பொருள் கொண்டு வந்தால் தட்டுமே இதை யோசித்தீர்களா? என்று கேட்ட பொழுது, அந்தப் பெண்மணி ரொம்ப சர்வசாதாரண பதில் சொன்னார் எங்களுக்கு இது தேவைப்படுது. நாங்க கட்டி இருக்கம் என்றார்.

அது சரிங்க உங்களுக்கு தொந்தரவு இல்லை.

ஆனா அது எங்களுக்கு தொந்தரவா இருக்கு என்றபோது எதற்கும் அந்த பெண்மணி செவி சாய்க்கவில்லை.

எங்கள் வீடு; நாங்கள் கட்டி இருக்கிறோம்; முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

எதிர்வாதம் செய்வதோ பிரச்சனை செய்வது முடிவு இல்லை என்பதை அறிந்து கொண்டான் காமராஜ்.

இது நம் சொந்த வீடு அல்ல. சொந்த வீடாக இருந்தால் சண்டை போடலாம்; பிரச்சனை செய்யலாம். வாடகை வீடு; அதுவும் அவர்கள் வீடு; அவர்கள் என்ன சொல்கிறார்கள். அப்படித்தான் இருக்கமுடியும். இது நாம் விவாதம் செய்து ஜெயிப்பதற்கு நாம் தேடி வந்த வேலை இல்லை. இதை மனதில் இருத்திக் கொண்டு, இதைப் பேசி அவர்கள் சண்டை போடுவதும் நம் தொழில் அல்ல. பிடித்தால் இருக்கலாம். இல்லை என்றால் வீட்டைக் காலி செய்து விட்டு போகலாம் என்ற மனநிலையில் இருந்தார் காமராஜ்.

அன்றொருநாள் முடிவெடுத்தார்; வீட்டைக் காலி பண்ண இருக்கேன் என்று அந்தப் பெண் மட்டும் சொன்னபோது,

எதுக்கு?

இல்ல எனக்கு இது பிடிக்கல என்றார்.

சரி என்று அந்தப் பெண்மணி வீட்டை காலி செய்வதற்கு சம்மதித்தார்.

அப்போதும் அந்த இடத்தில் அவர் கட்டிய காெடி இருந்தது. அவர் காலி செய்வதற்கு முன்பாக அவர்கள் வீட்டில் வழக்கம் போல சண்டை நடந்து கொண்டிருந்தது.

முன்னை விட அந்தச் சண்டை மிகவும் பெரிதாக இருந்தது. மனது கொள்ளாத காமராஜ் கீழே போய் பார்த்தார்.

அப்போது அந்தப் பெண்மணியை ஒரு கயிறு எடுத்து குரல்வளையை இழுத்துக் கொண்டிருந்தான் கணவன்.

சார் சார் விட்டுருங்க. தவறு. செத்துப் போயிர போறாங்க என்றபோது அவன் அந்த இறுக்கிய கழுத்தைக் கைவிடவே இல்லை.

எப்படியோ போராடி அந்த கயிறை பிடுங்கி கீழே எறிந்தார் காமராஜ். அந்த பெண்மணிக்கு மூச்சு போய் மூச்சு வந்தது.

இருமிக் கொண்டே என்னைக் கொல்லப் பார்த்தான்; நல்ல வேளை நீங்க வந்து காப்பாத்தினீங்க. இல்ல நான் செத்துப் போயிருப்பேன் என்று அழுது கொண்டே சொன்னாள் அந்தப் பெண்மணி.

இது எதையும் காதில் வாங்காத காமராஜ் அந்த கீழ் தளத்தில் இருந்து இரண்டாவது மாடிக்கு ஏறினார்.

அப்போதும் அவர்கள் கட்டியிருந்த அந்த கொடி அவன் தலையில் பட்டு ஆடிக் கொண்டிருந்தது.

சற்று முன் நாம் செல்லவில்லை என்றால் இதே கயிற்றால் இதே கொடிக் கட்டிய கயிறால் அந்தப் பெண்மணி கழுத்தை இறுக்கிக் கொண்டு இருப்பான். அந்த கணவன். நான் சென்றதால் ஒரு உயிர் தப்பித்தது. இனியும் நாம் இங்கிருப்பது ஞாயம் இல்லை என்று நினைத்த காமராஜர் வீட்டைக் காலி செய்து கொண்டு போய்விடலாம் என்று முடிவு செய்து கீழே இறங்கியபோது,

அந்தக் கொடியைக் கழற்றி இருந்தார் அந்தப் பெண்மணி.

இல்ல தம்பி நாங்க தப்பு பண்ணிட்டோம். ஏதோ ஒரு வகையில் அந்தக் கொடி உங்களுக்கு தொந்தரவாக இருக்கு. நீங்க என்ன காப்பாத்தலன்னா இதே கொடியால நான் செத்துப் போயிருப்பேன்.

இருக்கிற வரைக்கும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாம இருக்குறது நல்ல வாழ்க்கை. இதை நாங்க கட்டி வைத்தது உங்களுக்கு ஒரு விதமான தொந்தரவு கொடுக்கத் தான். தப்பு எங்க மேல தான் மன்னிச்சிடுங்க என்று அந்தக் கொடியை கழட்டினாள் அந்த பெண்மணி.

காமராஜ் எதுவும் சொல்லாமல் மாடிப் படிகளில் ஏறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *