செய்திகள்

கைது செய்தபோது போலீசார் அத்துமீறல்: மனித உரிமை ஆணையத்தில் ஜெயக்குமார் புகார்

சென்னை, ஏப்.14-

கைது செய்தபோது போலீசார் அத்துமீறியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 19.2.2022 அன்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போடுவதற்காக ஆயுதங்களுடன் வாக்குச்சாவடி மையத்தை சுற்றி வந்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நரேஷ் கொடுத்த புகாரின் பேரில் என் மீது பொய்வழக்கு பதிவு செய்த போலீசார் 21.2.2022 அன்று 70-க்கும் மேற்பட்ட போலீசார் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து என்னை கைது செய்தனர். லுங்கியுடன் என்னை உடைமாற்ற அனுமதிக்கவில்லை.

செருப்பு அணிய விடாமல் எனது சட்டையை பிடித்து இழுத்து சென்றனர். மருந்துகளை எடுத்து வர அனுமதிக்கவில்லை. சிறையில் எனக்கு முதல் வகுப்பு வழங்க கோர்ட் உத்தரவிட்ட போதும் அதுபோன்று முதல் வகுப்பு வசதி இல்லாத பூந்தமல்லி சிறையில் என்னை அடைத்தனர்.

இதன்காரணமாக அடிப்படை வசதி இல்லாத அறையில் கொசுக்கடியுடன் அவதிப்பட்டேன். 2 நாட்களுக்கு பின்பு தான் என்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றி முதல் வகுப்பு வழங்கினர்.

போலீசாரின் நடவடிக்கைகள் அனைத்தும் மனித உரிமை மீறல் ஆகும். எனவே, வண்ணாரப்பேட்டை துணை போலீஸ் கமிஷனர் சுந்தரவதனம், வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர்கள் ரவி (மயிலாப்பூர்), பூபாலன் (ராயபுரம்), சங்கரநாராயணன் (தண்டையார்பேட்டை), பிரபா (மத்திய குற்றப்பிரிவு), சப்–இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது மனித உரிமை ஆணையம் விரைவில் விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.