தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதி
நாமக்கல், அக்.28–
கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில், 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும்போது ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவதுடன், கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென இறந்துள்ளன. ஏராளமான வாத்துக்கள் இறந்ததால் கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பரிசோதனை முடிவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறவிக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 8 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து வெளி இடங்களுக்கு வாத்து மற்றும் கோழி உள்ளிட்ட பறவை இனங்கள் எடுத்துச்செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹரிப்பாட் நகராட்சி மற்றும் பள்ளிப்பாட் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் உதவியுடன் கொல்லப்படும் வாத்துக்கள் மற்றும் கோழிகள் முறைப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் பொது சுகாதார நடைமுறைகள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பறவை காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட விஷயங்களில் மாநில சுகாதார துறைக்கு உதவியாக இந்த குழு செயல்படும்.
அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
5 கோடி முட்டையின
கோழிகள் வளர்ப்பு
தமிழகத்தில் சுமார் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தினசரி கோடிக்கனக்கான முட்டைகள் மற்றும் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவைக்காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் பாதிப்பு ஏற்படுமா என கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.