செய்திகள்

கேரளாவில் கனமழைக்கு 10 பேர் பலி: 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

சாலக்குடி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை

திருவனந்தபுரம், ஆக. 2–

கேரளாவில் கடந்த ஞாயிறு முதல் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கண்ணூரில் உள்ள வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இரண்டரை வயதுக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் மழை காரணமாக கேரளாவில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் 10 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’டையும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ளது.

இன்று மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து வடக்கு நோக்கி மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அணைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியதாவது:

மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன, மலை மாவட்டமான இடுக்கியில்தான் அதிக முகாம்கள் உள்ளன என்றார்.

திருச்சூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அதிரப்பள்ளி அருகிலுள்ள சாலக்குடி ஆற்றின் நடுவில் ஒரு காட்டுயானை ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதன் காரணமாக யானையால் நிற்கவும் முடியாமல், கரைக்கு வரவும் முடியாமல் தவித்து வருகிறது கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக யானையை மீட்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.