சிறுகதை

குழந்தையின் அழுகை | ராஜா செல்லமுத்து

புறப்படத் தயாராக இருந்த ஒரு அரசு பேருந்தில் ஒரு கூட்டம் குபுகுபு என்று ஏறியது.
அவர்கள் கையில் பலகாரப் பானை, தட்டுப் பை என்று அவர்கள் செல்வதைப் பார்த்தால் ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்வது போல் இருந்தது.
கிராமத்து சாயல் அவர்கள் முகத்தில் அழியாமல் இருந்தது. அவர்கள் பஸ்சில் ஏறியதில் இருந்து விடாமல் பேசிக்கொண்டே வந்தார்கள். மற்ற பயணிகளுக்கு அது இடையூறாக இருந்தாலும் அவர்களின் பேச்சு, அந்த கிராமத்து பேச்சு பேருந்தில் இருந்தவர்களுக்கு ஒருவிதமான கிளுகிளுப்பை தந்தது.
அந்தப் பயணிகள் நடக்கும் பாதை எங்கும் அண்டா, பானை முட்டை என்று அத்தனையும் அடிக்கி வைத்து இருந்தார்கள். அப்போது ஒரு நிறுத்தம் வர விசில் ஊதினார் நடத்துனர். அதுவரை அமைதியாக இருந்த முகில் என்ற குழந்தை வீல் என்று அழ ஆரம்பித்தது. இதைச் சற்றும் எதிர்பாராத குடும்பத்தார்கள் அந்த குழந்தையை அழுகை நிறுத்துவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
டேய் சும்மா இருடா கண்ணா, ஏன் அழுகுறா? சும்மா இருடா என்று முதலில் சமாதானம் செய்தார்கள் அந்த குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
இன்னது என்று சொல்வதற்கும் அந்த குழந்தைக்கு வயதில்லை நடத்துனர் பேருந்தில் அங்கும் இங்கும் சென்று கொண்டு அந்த பயணிகளை திட்டிக் கொண்டு இருந்தார்.
ஏம்மா… மனுசன் நடக்கிற பாதை எல்லாம் இப்படி தட்டுமுட்டு சாமான்கள் வெச்சிட்டு இருந்தா எப்படி ஆளுக ஏறுவாங்க. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா என்று திட்டிக்கொண்டே பயண சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார் நடத்துனர்.
அந்த குழந்தை நடத்துனரை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தது. அழுகைக்கான காரணத்தை சொல்வதற்கான வாயும் வரவில்லை. அந்தக் குழந்தையின் உறவினர்கள் அந்த குழந்தையின் சட்டைய அவிழ்த்துப் பார்த்தார்கள். ஏதும் பூச்சி இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். பின் அந்த குழந்தையின் டவுசர் அவிழ்த்தார்கள். ஏதும் இருக்கிறதா என்று ஆராய்ந்த பொழுது அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவி
ஏண்டா . அவன் அழுகிறான்னு எனக்கு தான்டா தெரியும். இந்த பஸ் எப்ப நிக்கிதோ அப்போ தான் அழுகையை நிப்பாடடும் என்றாள் அந்த கிழவி. அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மறுபடியும் ஒரு நிறுத்தம் வர கண்டக்டர் விசில் ஊதினார். அந்த குழந்தை மறுபடியும் கண்டக்டரை பார்த்து வீரியம் கொண்டு அழ ஆரம்பித்தது. எவ்வளவு சமாதானம் சொல்லியும் தன் அழுகையை அந்தக் குழந்தை நிறுத்தவே இல்லை. உறவினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான சமாதானம் சொல்லிக் கூட அது எதையும் செவியில் வாங்காமல் அந்தஅந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது.
அந்தக் கிழவி மட்டும் தான் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள்
ஐயா நீங்க பேசாம இருங்க. ஐயா இந்தப் பஸ் எப்ப நிக்கிதோ அப்பதான் இந்த குழந்தை அழுகையை நிப்பாட்டும் என்று அவள் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். அது யாருக்கும் புரியவே இல்லை குழந்தை அழுது கொண்டே இருந்தது. நடத்துனரைப் பார்ப்பதும் அழுவதும் ஆக இருந்தது. . நிறுத்தங்களில் அவர் விசில் அடிப்பதும் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதும் இந்த மொத்த கூட்டத்தை விசித்திரமாக பார்ப்பதுமாக இருந்தார்.
ஒருவழியாக அந்தக் குடும்பம் இறங்க வேண்டிய இடமும் பஸ் பேருந்து பேருந்தின் கடைசி நிறுத்தமும் ஒன்றாக இருந்தது.
அந்தக் குழந்தை அதுவரை அழுது கொண்டே தான் வந்தது.
முன்பு சட்டையோடு அழுது கொண்டிருந்த குழந்தை இப்போது உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அழுது கொண்டிருந்தது
அந்தக் கிழவி மட்டும் குழந்தைக்கு சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தாள். பேருந்தில் கடைசி நிறுத்தத்திற்கு வந்தது பேருந்து.
கடைசி நிறுத்தம் வந்துருச்சு. எல்லாரும் இறங்குங்க என்று சொல்ல அத்தனை பேரும் இறங்கினார்கள்.நடத்துனர் இறங்கி வெளியே சென்றுவிட்டார்
அப்போது அந்த கிழவியை பார்த்த ஓட்டுனர்…
ஏன்மா இந்த குழந்தை எதுக்கு அழுதுட்டு வந்துச்சு. பஸ் நிக்கவும் அழுகைய
நிபாட்டிருச்சி. ஏன் என்று ஓட்டுனர் கேட்டார்.
ஐயா அது ஒன்னும் இல்லையா. எந்த பஸ்ல ஏறினாலும் என் பேரைன் இப்படித்தான் அழுவான். அவன் எதுக்கு அழுகிறான்றான்ற விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்று மறுபடியும் முடிச்சு போட்டாள் அந்த கிழவி.
அதான் ஏன்னு கேக்குறேன் சொல்லுமா என்று ஓட்டுனர் கொஞ்சம் கோபமாக கேட்டார்.
ஐயா கண்டக்டருக்கு வச்சிருக்கிற பித்தளை விசில் வேணும்னு அழுகிறான் என்று அந்தக் கிழவி சொன்னதும் …. பேருந்தை விட்டு இறங்கி சிறிது தூரத்தில் நின்ற நடத்துனர்….,
கிழவி பேசிய பேச்சைக் கேட்டு ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *