செய்திகள்

குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது

திருப்பரங்குன்றம்,மே 16–
முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம், தனக்கன்குளம், பி.ஆர்.சி. காலனி, நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற ஏராளமான திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். தமிழகத்தில் உள்ள பெண்கள் வளம் பெறவேண்டும் என்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய மாநிலம் தமிழகம். தண்ணீர் பிரச்சினை தீர்க்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்தியுள்ளார். புதிய வீராணம் உள்ளிட்ட பல்வேறு சீரிய திட்டங்களை நிறைவேற்றினார்.
அண்ணா தி.மு.க.வை
அசைக்க முடியாது
புரட்சித்தலைவி அம்மா ‘மக்களுக்காக நான்’ என்ற வழியில் செயல்பட்டாரோ, அதேவழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வழிநடத்திச் செல்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அண்ணா தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அண்ணா தி.மு.க.வை அவ்வளவு சுலபமாக யாராலும் அசைத்து விட முடியாது.
தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் பதவி ஒன்றே குறிக்கோளாக நினைத்து அரசியல் நடத்துபவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஸ்டாலின் வருகிற 23–ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று கூறி வருகிறார். ஆட்சியை கலைத்து முதலமைச்சராக வேண்டும் என்பது ஒரு கட்சிக்கும், அக்கட்சியின் தலைவருக்கும் உகந்ததா? ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது.
சட்டசபையில் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதில்லை. சட்டசபை யில் இருந்து வெளியேறிவிடுவார். சட்டையை கிழித்து கொண்டு வந்துவிடுவார். எதற்காக அவ்வாறு செய்தோம் என்று அவருக்கே தெரியாது. ராகுல்காந்தியை பிரதமராவார் என்று கூறிய அவர், தற்போது சந்திரசேகர ராவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். தி.மு.க. பெரிய கட்சி என உலகிற்கு விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவே இவ்வாறு அவர் நடந்து கொள்கிறார் என்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி வெற்றி பெறுவது உறுதி. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். இவ்வாறு நடிகர் சரத்குமார் பேசினார்.
பிரச்சாரத்தின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *