செய்திகள்

குஜராத்தில் 10 ஆம் வகுப்பில் 64 சதவீத மாணவர்களே தேர்ச்சி

157 பள்ளியில் அனைவருமே பெயில்

காந்திநகர், மே 25–

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் வெறும் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு SSC என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 – 2023 கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகளுக்காக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 7.34 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்ப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் காலை 8 மணியளவில் gseb.org என்று இணையதள முகவரியில் வெளியாகின. குஜராத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைய குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களையாவது பெற வேண்டும்.

157 பள்ளியில் தேர்ச்சி இல்லை

இந்த நிலையில் குஜராத் கல்வித்துறை வெளியிட்டு இருக்கும் தேர்வு முடிவுகளின்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதாவது தேர்வு எழுதிய 7,34,898 பேர்களில் 4,74,893 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

இவர்களில் 6,111 பேர் மட்டுமே A1 கிரேட் பெற்று உள்ளார்கள். 44480 பேர் A2 கிரேடில் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர், B1 கிராடை 86611 பேரும், B2 கிரேடை 1,27,652 பேரும், C1 கிரேடை 1,39,248 பேரும், C2 கிரேடில் 67,373 பேரும், D கிரேடில் 3,412 பேரும், E1 கிரேடில் 6 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளார்கள்.

இந்த தேர்வில் குஜராத்தில் உள்ள 272 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமே பதிவாகி இருக்கிறது. இதில் 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை.

இதுவே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதி 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டோடு ஒப்பீடுகையில், குஜராத் மாநிலம் கல்வியில் மிகவும் பின்தங்கி இருப்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *