பருவநிலைக்கு உகந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்
ஆமதாபாத், அக்.21-
குஜராத்தில் ஐ.நா. பொதுச்செயலாளரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பருவநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து பூமியை காப்பதற்கான திட்டத்தை இருவரும் தொடங்கி வைத்தனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மும்பைக்கு வந்தார். நேற்று முன்தினம் மும்பையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தநிலையில், நேற்று குஜராத் மாநிலம் கேவடியாவுக்கு சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், கேவடியாவில் நடந்த நிகழ்ச்சியில், ‘மிஷன் லைப்’ என்ற புதிய திட்டத்தை இருவரும் கூட்டாக தொடங்கி வைத்தனர். திட்டத்தின் அடையாள சின்னம், முழக்கம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டம், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து பூமியை பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட உலகளாவிய செயல் திட்டம் ஆகும்.
இந்த செயல் திட்டத்தில், பருவநிலைக்கு உகந்த விதத்தில் வாழ்க்கை முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தனிநபர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள், தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை, அரசாங்கம் கடைபிடிக்க வேண்டிய கொள்கை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இது மக்களுக்கு ஆதரவான கிரகம் என்ற கருத்தை வலுப்படுத்த உதவும். மக்களின் கூட்டு அணுகுமுறையை மாற்றுவதற்கான மும்முனை வியூகத்தை பின்பற்றுவதை நோக்கமாக கொண்டது’’ என்று தெரிவித்தார்.
நாட்டின் முதலாவது சூரிய மின்சக்தி கிராமமாக அறிவிக்கப்பட்ட மோதெராவுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் சென்று அங்கிருந்த கிராம பெண்களுடன் உரையாடினார்.