சிறுகதை

கிசு கிசு | ஆவடி ரமேஷ்குமார்

நினக்கவே விமலாவுக்கு உடம்பில் கம்பளிப்பூச்சி ஊறுவது போலிருந்தது. வரட்டும் என்று தனது கணவன் ராகவனுக்காக காத்திருந்தாள்.

அந்த வார ‘ கண்கள்’ பத்திரிக்கையில் வந்திருந்த ‘கிசு கிசு’ வை படித்ததும் அதிர்ந்து போனாள் விமலா.

‘கடவுளே..இது உண்மையாக இருக்கக்கூடாது’ என வேண்டிக்கொண்டாள்.

அவளுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

மதிய உணவை சமைக்க மறந்து கட்டிலில் போய் படுத்தவள் தான் எழ மனமில்லாமல் அப்படியே கிடந்தாள்.

“விமலா”..

எதிர் வீட்டு ஜோதி வாசலில் நின்றபடி கூப்பிட்டாள்.

“இப்பத்தான் தேனீ வார பத்திரிக்கையை வாங்கிட்டு வந்தேன். உன் வீட்டுக்காரர் எழுதியிருந்ததை படிச்சேன்.

உண்மையிலேயே உங்க வீட்டுக்காரருக்கு அபாரமான மூளைடி. விசித்திரமான கிசுகிசுக்களை அட்டகாசமா எழுதறார்டி. எப்படித்தான் இந்த மாதிரி அபூர்வமான கிசுகிசுக்களையெல்லாம் செய்தியா சேகரிக்கிறாரோ..!

நான் வந்து அவரை பாராட்டிட்டுப்போனேன்னு சொல்லு. என்ன..” போய்விட்டாள் ஜோதி.

விமலாவிற்கு ‘ அப்பாடா’ என்றிருந்தது. நல்ல வேளை ஜோதி ‘ கண்கள்’ பத்திரிக்கையை படிக்கவில்லை. படித்திருந்தால் இவள் கணவனைப் பற்றி அதில் வந்திருந்த’ கிசுகிசு’ பற்றி தெரிந்து போயிருக்கும்.

இப்போது பாராட்டியது போல் பாராட்டிவிட்டு போவாளா? காரி துப்பிவிட்டு அல்லவா போயிருப்பாள்?

*

ராகவன் ஒரு மணி சுமாருக்கு வந்தான்.

கை கழுவிவிட்டு டைனிங் டேபிளில் அமரந்து கொண்டு “விமலா சாப்பாடு போடும்மா” என்றான்.

“இன்னிக்கு உங்களுக்கு சாப்பாடு இல்லை” என்றவள்,

கோபமாக ‘ கண்கள்’ பத்திரிக்கையை தூக்கிப்போட்டுவிட்டு,

“தேனீல கிசுகிசு எழுதற உங்க லட்சணத்தை இதுல வந்திருக்கிற கிசுகிசு தோலுருச்சு காட்டிடுச்சு. படிச்சிட்டு உண்மையை சொல்லுங்க.” என்றாள் விமலா.

அவளை விநோதமாக பார்த்துவிட்டு கண்கள் வார இதழை புரட்டிப்படித்தவன்,

“அய்யய்யோ.. என்ன இது… எனக்கும் இளம் புது நடிகை ஸ்ரீலதாவுக்கும் தப்பான உறவு இருக்குனு எழுதியிருக்கானுக பாவிக. இதை நீ நம்பறயா விமலா?” என்று அலறினான்.

‘கண்களை’ தூக்கி எறிந்தான்.

“நான் நம்புவது நம்பாதது ஒரு பக்கம் இருக்கட்டும். இனிமேல் நீங்க தேனீல கிசுகிசு எழுதறதை விட்ருங்க” என்றாள்.

“என்ன நீ அடிமடிலயே கையை வைக்கறே. நான் தேனீ வார இதழ்ல வேலை பார்க்கிறதே கிசுகிசு எழுதறதுக்குத்தான்.

அதையை நான் நிறுத்திட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்றதாம்?”

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இனிமேல் கிசுகிசு எழுதமாட்டேன்னு உத்திரவாதம் கொடுத்தாத்தான் இன்னிக்கு உங்களுக்கு சாப்பாடே!”

“என்னடாது வம்பாப்போச்சு” என்று புலம்பிய ராகவன்,

“சரி..சரி..இனிமேல் கிசுகிசு எழுதலை; வேற எதையாவது எழுதித் தொலைக்கிறேன்” என்றான்.

அரை மணி நேரத்தில் சாப்பாடு செய்து போட்ட விமலா, ” சினிமா உலகத்துல நடக்கிறதை நீங்க கிசுகிசுவா எழுதும் போது அதை படிக்க நமக்கு சுவாஸ்யமாத்தான் இருக்கு. ஆனா சம்பந்தப்பட்டவங்க மனசு என்ன பாடுபடும்னு நான் இன்னைக்கு அனுபவ பூர்வமா உணர்ந்திட்டேன். அதான் உங்களை இனிமே எழுத வேண்டாம்னு கேட்டுக்கிட்டேன்” என்று ராகவனை சமாதானப்படுத்தினாள்.

சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட ராகவன், ” விமலா… நான் கிசுகிசு எழுதறதை நிறுத்தப் போறதில்லை. நான் எழுதறதெல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தீர விசாரிச்சிட்டுத்தான் எழுதிட்டு வர்றேன். அதனால தான் எனக்கு இது வரைக்கும் மறுப்புக் கடிதமே வந்ததில்லை. ஆனா இந்த கண்கள் பத்திரிக்கைக்காரனுக்கு என் மேல பொறாமை. அதில் கிசுகிசு எழுதறவன் இதுக்கு முன்ன எங்க பத்திரிக்கைலதான் எழுதிட்டிருந்தான். எனக்கும் அவனுக்கும் எழுதறதுல ஒரு தடவை சண்டை வந்திடுச்சு. எங்க ஆசிரியர் அவனை வேலையை விட்டு நீக்கிட்டார். அந்த வெறுப்புல தான் தப்பு தப்பா எழுதியிருக்கான்.

இதுக்காக நமக்குள் சண்டை வந்து நான் எழுதறதை விட்டோனும்கிறது தான் அவனோட எண்ணம். அவன் ஜெயிக்க விடலாமா? இதை நீ நல்லா புரிஞ்சுக்கனும். என்ன விமலா நான் வரட்டுமா?” என்று கேட்டான்.

ராகவன் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்த விமலா “சரிங்க” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *