செய்திகள்

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணி 31ந்தேதிக்குள் முடிவடையும்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை, மே.25-

காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வருகிற 31ந் தேதிக்குள் முழுமையாக முடிவடையும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் 647 தூர்வாரும் பணிகளை கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4,061 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்வதற்காக ரூ.65.10 கோடி மதிப்பீட்டுக்கான நிர்வாக ஒப்புதல் 17.5.2021 அன்று வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 31 தூர்வாரும் பணிகளுக்கு ரூ.180 கோடி மதிப்பீட்டுக்கான ஒப்புதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது.

காவிரி டெல்டா பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் ஆறுகள், கால்வாய்கள், கிளை கால்வாய்கள், வடிகால்கள், வழங்கு கால்வாய்கள் ஆகியவற்றில் படிந்துள்ள மண் திட்டுகள், புதர்களை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டில் காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த பணிகளை குறுவை சாகுபடிக்கு முன்பு முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் 23.4.2022 அன்று தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு (82 சதவீதம்) பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது.

கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணிகள் நாளொன்றுக்கு 210 கி.மீ. நீளம் என்ற அளவில் போர்க்கால அடிப்படையில் கூடுதல் எந்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31-ந் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.