செய்திகள்

காலையில் நர்சிங் பயிற்சி ; மாலையில் சினிமா, டிவி சீரியலுக்கு டப்பிங் : இரட்டைக் குதிரையில் ஐஸ்வர்யா!

சென்னை, மார்ச் 9–

காலையில் நர்சிங் பயிற்சி; வீடு திரும்பியதும் மாலையில் சினிமா, டிவி சீரியலில் நடிகைளுக்கு டப்பிங் குரல்… இப்படி ஒரே நாளில் இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் இளைஞி ஐஸ்வர்யாவை (வயது 21) நேரில் பார்த்தபோது ஆச்சரியமாய் இருந்தது. (பிஎஸ்சி – 4ம் ஆண்டு பட்டப்படிப்பு) இறுதியாண்டு மாணவி.

வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் பயிற்சியில் இருக்கிறார். இவரது தந்தை குமரவேல். தயாரிக்கும் தன் சொந்தப் படத்தில் முறுக்கு மீசையோடு கம்பீரமாய் காட்சி தரும் மார்பளவு புகைப்படத்தைப் போட்டு – 1990 காலக்கட்டத்தில் படவுலகையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனின் அலுவலகத்தில் சினிமா உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். பிரவீண் காந்தியின் ரட்சகன்ஸ்டார் உள்பட விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்.

தந்தை சினிமாக்காரர். மகளுக்கு இருந்த குரல் வளம், தமிழில் தெளிவான – அழுத்தந்திருத்தமான உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கம் (மாடுலேஷன்) இருந்ததைப் பார்த்து, சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேச அறிமுகப்படுத்தினார் 13 ஆண்டுகளுக்கு முன்.

முதல் படத்தில் குரல் படு ஓகே. அதன் தாக்கம் ஒவ்வொரு இயக்குனருக்கும் குரல் பிடித்துப் போகவே, அடுத்தடுத்து வந்த சந்தர்ப்பங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, இன்று வெற்றிகரமாக 13 ஆண்டுகளை முடித்திருக்கிறார் ‘டப்பிங்’ கலைஞராக, ஐஸ்வர்யா.

கமலின் பாபநாசம், 36 வயதினிலே

100க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கேரெக்டர்களுக்கு குரல் கொடுத்திருந்தாலும்… கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இதேபோல, இப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் மவுனராகம், ஆயிரம் ஜென்மங்கள் உள்பட 4 தொடர்களுக்கு படப்பிங் கொடுத்து வருகிறார்.

இவருக்கு ஒரு அண்ணன். பெயர் பிரபு. இவரும் பகுதி நேர டப்பிங் கலைஞராக இருக்கிறார். முழு நேரம், சென்னையில் ஒரு பார்மசி நிறுவனத்தில் வேலை. இவர் திருமணமாகி தனியாகப் போய் விட்டார்.

8 ஆண்டுகளுக்கு முன் தாய் இறந்தார். இந்நிலையில் மகளை ‘டப்பிங்’கிற்கு கூட்டிப் போய் திரும்ப அழைத்து வருவதற்கும், நர்சிங் பயிற்சிக்கு கொண்டு போய் விட்டுக் கூட்டி வருவதற்கும், பாதுகாப்பு காரணமாக, சினிமாவில் உதவி இயக்குனர் வேலையை உதறித் தள்ளிவிட்டு இப்போது முழு நேரம் ஆட்டோ ஓட்டுனராக மாறி இருக்கிறார் குமரவேல்.

சாலிகிராமத்தில் குடியிருந்து வருகிறார். சாலிகிராமம் – வடபழனி – கோடம்பாக்கம் குடியிருப்பு வாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர். யார்– எங்கு கூப்பிட்டாலும் முகஞ்சுளிக்காமல் கொடுக்கும் கட்டணத்தை (நியாயமான மீட்டர்படி) ஆட்டோ ஓட்டுகிறார்.

வெள்ளத் தண்ணீரில் ஆபத்பாந்தவன்

மேக வெடிப்பு காரணமாக சென்னை கடந்த ஜனவரி மாதம் வெள்ளக்காடாகி, போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி, முழங்கால் அளவு தண்ணீரில் மக்கள் தவித்துப் போனார்கள் அல்லவா? தனியார் வாடகை வாகன நிறுவனங்களின் டிரைவர்கள் அவர்களுக்கான அழைப்பை முதலில் ஏற்று பின் மறுத்து நிராகரித்த நிலையில், 2 நாட்களில் 20க்கும் மேற்பட்ட சவாரியைத் தொடர்ந்து, பொதுமக்களின் வாழ்த்துக்களை, நன்றியை சம்பாதித்தவர் குமரவேல் என்று குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் சர்டிபிகேட் கொடுத்தனர். (அவசர நேரத்தில் ஆபத்பாந்தவன்).

‘‘பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்று முழு நேர வேலைக்கு மகள் ஐஸ்வர்யா போகட்டும். கை நிறைய காசு பார்க்கட்டும். அவளின் ஆசைப்படி ‘டப்பிங்’கையும் தொடரட்டும்’’… என்றவரிடம் ஒரு கேள்வி எழுப்பினோம்.

‘சினிமா உதவி இயக்குனர் பொறுப்பை உதறிவிட்டீர்களே, குடும்பத்துக்காக. மீண்டும் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகும் எண்ணம் உங்களை துரத்திக் கொண்டிருக்குமே…?!

சிரித்துக் கொண்டே அமைதியாக சொன்னார்:

‘நான் எதிர்பார்த்த நிலையிலிருந்து வீசி எறியப்பட்டாலும், விழுந்த இடத்திலிருந்து விருட்சமாய் எழுந்து காட்டும் உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது. எனக்குள் ஓர் உண்மை இருக்கிறது. அந்த உண்மை தான் நான்.

என்றும் நினைவில் வாழும் மதிப்புமிகு அப்துல்கலாம் ஐயா சொல்வாரே – தூக்கத்தில் வருவதல்ல, கனவு. உன்னைத் தூங்கா விடாமல் செய்வது தான் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் வெறி அந்த நாளும் நிறைவேறாமலா போகும்? வராமலா போகும்? எதிர்க்கேள்வியோடு நிறுத்தினார், குமரவேல்.

Leave a Reply

Your email address will not be published.