சிறுகதை

காதலெனும் தேர்வெழுதி | மலர்மதி

அந்தக் கிராமத்து வழியாக தினமும் 4 சரக்கு ரெயில்களும் ஒதே ஒரு பயணிகள் ரெயிலும் கடந்துச் செல்லும்.

பகல் 3 மணிக்கு ஒரு சரக்கு ரெயில் வரும். அந்த வண்டிக்கு முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்திருந்தனர் ஜெகனும் வெங்கடேஸ்வரியும்.

சொல்லி வைத்தாற்போல் ஜெகன் சரியான சமயத்தில் ஆஜராகி விட்டான். ஆனால் வெங்கடேஸ்வரியைத்தான் இன்னமும் காணோம்.

ஜெகனும் வெங்கடேஸ்வரியும் வெவ்வேறு ஜாதி. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை. காதல் கைகூடும் என்பதில் துளி கூட நம்பிக்கை இல்லை. ஒன்று சேர்ந்து வாழ முடியாத இந்த உலகில் ஒன்றாகச் சேர்ந்து சாவது தான் ஒரே வழி என அவர்கள் தீர்மானித்து விட்டனர்.

ரெயில் பாதையின் ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்து வெங்கடேஸ்வரியின் வருகைக்காகக் காத்திருந்தான் ஜெகன்.

அவன் பார்வை அவனுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அந்த இளைஞன் மீது பதிந்தது. அவன் அடிக்கடி தன்னைப் பார்ப்பதும் சிறு கற்களை எடுத்து வீசுவதுமாக இருந்தான்.

ஜெகனுக்கு சந்தேகம் எழுந்தது. அவனைக் கவனிக்காதது போல் பாவனை செய்து கொண்டு ஓரக் கண்ணால் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுப்பதும் அதைப் பார்த்து விட்டு மீண்டும் பத்திரப்படுத்தி வைப்பதுமாக இருந்தான். அவனுடைய நடவடிக்கை சற்று விநோதமாகவே இருந்தது.

தன்னுடைய தற்கொலைக்கு அவன் எங்கே இடைஞ்சலாக இருக்கப் போகிறனோ என்கிற ஓர் எண்ணம் எழுந்தபோதிலும் ஒரு வேளை அவனும் தற்கொலை செய்து கொள்ள வந்திருப்பானோ என்கிற சந்தேகமும் முளைத்தது ஜெகன் மனதில்.

வெங்கடேஸ்வரியை இன்னமும் காணோம்.

என்னவாயிற்று?

ஏன் நேர தாமதம்?

ஜெகன் நிம்மதி இழந்து தவிக்கலானான்.

நேரம் நத்தையாய் நகர்ந்து மேலும் ஜெகனை இம்சைப்படுத்த வெங்கடேஸ்வரி வரும்வரை அந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்தால் என்னவென்று தோன்றியது.

மெல்ல எழுந்து அவனை நோக்கி நடந்தான்.

ஜெகன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு சற்றே மிரண்டான் அந்தப் பையன்.

“தம்பி… ஊருக்குப் புதுசா?” என மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.

“இ..இல்லை…” – அவன் எதற்கோ பயப்படுவதாகப் பட்டது ஜெகனுக்கு.

“இதற்கு முன் நான் உன்னைப் பார்க்கலை. அதான் கேட்டேன்.” என்றவன்,

“உன் பேரு என்ன?” என்று கேட்டான்.

“சங்கரன்.”

“படிக்கிறியா?”

“ஆமாம். பிளஸ் டூ எக்ஸாம் எழுதி இருக்கேன்.”

“தனியா உட்கார்ந்திருக்கியே யாருக்காவது காத்திருக்கியா?”

“இல்லை. நான் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்.”

அவனுடைய பதில் ஜெகனுக்குத் திருப்தியளிக்கவில்லை.

மேற்கொண்டு அவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்று தெரிந்ததும் மௌனமாய் அங்கிருந்து திரும்பி வந்து தன் இடத்தில் அமர்ந்து கொண்டான்.

சங்கரன் மீண்டும் தன் சட்டைப் பையிலிருந்து அந்தக் காகிதத்தை எடுத்தான்.

ஜெகன் அதை கவனித்தான்.

அப்போ திடீரென்று அடித்த காற்றில் அந்தக் காகிதம் அவன் கையிலிருந்து நழுவிப் பறந்தது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சங்கரன் திடுக்கிட்டான்.

காற்றில் பறந்த காகிதத்தைப் பிடிக்க அவன் எழுந்து ஓடி வந்தான்.

சொல்லி வைத்தாற்போல் சரியாக அந்தக் காகிதம் ஜெகனின் முகத்தில் வந்து மோதி ஒட்டிக்கொண்டது.

அதை எடுத்த ஜெகனின் பார்வை அதில் பதிந்தது.

அதில் ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்கிற பயத்தில் நானே தேடிக்கொண்ட முடிவு இது.

இப்படிக்கு சங்கரன்.

என எழுதி இருந்தது.

அதைப் படித்து அதிர்ந்துபோன ஜெகன் நிமிர்ந்தான்.

முச்சிரைக்க ஓடி வந்த சங்கரன் அந்தக் கடிதத்தைப் பிடுங்கிக்கொண்டான்.

“அடப் பாவி.. நீ தேர்வு எழுதி இருக்கே. முடிவு இன்னும் தெரியவில்லை. அதற்குள் எதுக்கு இந்த முடிவு? ஒரு வேளை நீ பாஸாகிவிட்டால்..? அட, அப்படியே பெயிலானாலும் என்ன? மீண்டும் அரியர்ஸ் எழுத வாய்ப்பிருக்கே? கோழைத்தனமா இந்த முடிவுக்கு வரலாமா?”

ஜெகனின் அறிவுரை கேட்டு தலை குனிந்து நின்றான் சங்கரன்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, “என்னை மன்னிச்சுருங்க சார். நான் பயந்து, குழம்பிப் போய்த்தான் இந்த முடிவை எடுத்தேன். என்னை வழி நடத்தவோ, அறிவுரை வழங்கவோ யாருமில்லை. நல்ல நேரத்தில் வந்து என்னைக் காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி சார். உங்களை என் வாழ்நாள் முழுக்க மறக்க வேமாட்டேன். நான் வர்றேன்.” என்றவாறு அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தான். கரம் குவித்து விடைபெற்றான்.

ஜெகனுக்கு நிம்மதியாக இருந்தது.

தூரத்தில் ஒரு புள்ளியாய்த் தண்டவாளத்தில் வெங்கடேஸ்வரி நடந்து வருவது தெரிந்தது. ஆள்அரவமற்ற அந்த மத்தியான நேரத்தில் யாரும் அவளைக் கவனிக்க வாய்ப்பில்லை. அவள் நெருங்கி வந்ததும், “ஏன் வெங்கடேஸ்வரி லேட்டு..?” என்று கேட்டான் ஜெகன்.

“வர்ற வழியில ஒரு பிரச்சினை ஜெகன்.” – சொல்லிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் வெங்கடேஸ்வரி.

“அப்படி என்ன பிரச்சினை?”

“எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டு முன் ஒரு சிறு கூட்டம். என்னன்னு விசாரிச்சா அந்த வீட்டுப் பொண்ணு தூக்கு மாட்டி சாக முயற்சி பண்ணி இருக்கா. ஏன்னு கேட்டதுக்கு அவ தேர்வு சாரியா எழுதலையாம். தோல்வி பயத்துல அந்த முடிவுக்கு வந்திருக்கா.”

“அப்புறம்?”

“அப்புறமென்ன?பேசினேன். அவளுக்கு புரியவெச்சேன். தேர்வு முடிவு தெரிஞ்சுக்காம இப்படி ஒரு கோழைத்தனமான முடிவுக்கு வரலாமா? அப்படியே தேர்வில் தவறி விட்டாலும் மீண்டும் எழுத வாய்ப்பிருக்கே என்று அவளுக்கு அறிவுரை சொன்னேன். அவ தெளிஞ்சுட்டா.”

“ஒரு உயிரைக் காப்பாத்தி இருக்கே. பரவாயில்லை. சரி, வண்டி வர இன்னும் 10 நிமிடம் தான் இருக்கு.” என்றவன்,

“நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதே. இந்தத் தற்கொலை அவசியம்தானா?” என்று கேட்டான்.

“என்ன ஜெகன் நீ? நாம ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் இது பத்திப் பேசியிருக்கோம்? பல மணி நேரம் கலந்தாலோசித்தப் பிறகுதானே இந்த முடிவுக்கு வந்தோம்? எல்லாம் தெளிவா பேசித் தீர்மானித்துவிட்டு இப்பத் திரும்பவும் இந்த மாதிரி ஒரு கேள்வி கேக்கறது நல்லா இல்ல. இனி இது பத்தி யோசிக்க நேரமே இல்லை. நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காம எடுத்த முடிவுல உறுதியா இருந்தா சரி.”

ஜெகனுக்கு ஆச்சாரியமாக இருந்தது.

வெங்கடேஸ்வரி தான் எவ்வளவு திடமாக இருக்கிறாள்? உயிரைவிடப் போவது ஏதோ ஒரு சாதாரண காரியத்தைச் செய்யப்போவது போல் அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறாள்? அவளால் எப்படி இவ்வளவு தைரியமாக இருக்க முடிகிறது? அவளின் மன வலிமையைக் கண்டு மலைத்துப் போனான் ஜெகன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,

“வெங்கடேஸ்வரி நான் ஒரு கேள்வி கேக்கறேன். நீ அதுக்குப் பதில் சொல்லு…” என்றான்.

“என்னது? கேளு…”

“நாம ஏன் தற்கொலை செய்யப் போறோம்..?”

“ஏன்னா நம்ம காதல் கை கூடாதுன்னு திட்டவட்டமா தெரிஞ்சுபோச்சு. அதனால.”

“நம்ம காதல் ஜெயிக்க நாம ஏதாவது முயற்சி எடுத்தோமா?”

“இல்லை.”

“ஏன்?”

“அது வீண் முயற்சின்னு நமக்குத் தெரியும்.”

“முயற்சியே எடுக்காம அது வீண் முயற்சியா இருக்கும்னு தீர்மானிப்பது முட்டாள் தனம் இல்லையா?”

“நீ என்ன சொல்றே, ஜெகன்?”

“இந்த உலகத்துல ஆண்டவன் சிலவற்றைக் கடினமாகவும் சிலவற்றைச் சுலபமாகவும் வைத்திருக்கிறான். அது எதுக்குன்னு தெரியுமா? எல்லாமே சுலபமானதா இருந்தா மனிதன் சோம்பேறியாகிவிடுவான்னு தான். சிலவற்றைக் கஷ்டப்பட்டுச் செய்தால் தான் அதன் அருமையே புரிய வரும். அதனால்தான்.”

“புரியலையே ஜெகன்?”

“புரியும்படியாச் சொல்றேன். நீ வர்றதுக்கு முன்னால நானும் ஒரு மாணவனைக் காப்பாத்தினேன். நம்மைப் போலவே அவனும் தற்கொலை செஞ்சுக்க வந்திருந்தான். பாரீட்சை எழுதிட்டு எங்க பெயிலாகிவிடுவோமோங்கிற பயத்தில் அவன் அந்த முடிவை எடுத்திருந்தான். அவனுக்குப் புத்திமதி சொல்லி அனுப்பினேன். நம்ம காதலுக்கு நிறைவேற நாம என்ன முயற்சி எடுத்தோம்? கூடிப் பேசினோம். நடக்கப்போற காரியங்களைக் கற்பனை செய்தோம். அநாவசியத்துக்குப் பயந்துப்போய் கோழைத்தனமா இந்த பயங்கர முடிவை எடுத்திருக்கோம். இது சரின்னு எனக்குத் தோணலை.”

வெங்கடேஸ்வரி சுத்தமாய்க் குழம்பிப் போனாள்.

ஜெகன் தொடர்ந்தான்

“பள்ளிக் கூடத்துல எதுக்குப் பரீட்சை வைக்கிறாங்க?”

“நாம ஒழுங்கா பாடத்தைப் புரிஞ்சு வெச்சிருக்கோமான்னு சோதிக்கத்தான்.”

“கரெக்ட். சரியா பதில் எழுதினா பாஸ் ஆகறோம். இல்லன்னா பெயில் ஆகிவிடுகிறோம். ‘ஐயையோ… ஒரு வேளை நாம பெயில் ஆகிவிடுவோமான்னு பயந்தால் யாருமே தேர்வு எழுதமாட்டாங்களே.”

“ஆமாம்…” – இப்போது கொஞ்சம், கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது வெங்கடேஸ்வரிக்கு.

“அதே மாதிரிதான் நம்ம காதலும். காதலிலும் தேர்வு உண்டு. வெற்றி, தோல்வி உண்டு. தேர்வு எழுதாமல் முடிவுக்குப் பயப்படுவது முட்டாள் தனம்.”

“அப்ப நீ என்ன சொல்லவர்றே ஜெகன்?”

“நீயும் நானும் எப்படி ரெண்டு பேரைக் காப்பாத்தினோமோ அதே அறிவுரையை நாமும் கடைப்பிடிப்போம். வா, நாமும் காதல் தேர்வு எழுதுவோம். அதன் முடிவைப் பார்ப்போம். எதிலும் துணிந்து நிற்போம். வெற்றி நிச்சயம்னு எனக்குத் தோணுது.”

ஜெகனின் வீரியமிக்கப் பேச்சு வெங்கடேஸ்வரியை உசுப்பி விட்டது.

“என்னென்ன நடக்குமோ, எது எங்க போய் முடியுமோன்னு அநாவசியத்துக்குப் பயந்துப்போய்த் தான் நான் இந்த முடிவை எடுத்தேன் ஜெகன். ஆனா, நீ.? இவ்வளவு ஆழமா சிந்திச்சிருக்கியே… போராடித்தான் பார்ப்போமேங்கற தைரியம் இப்ப எனக்கும் வந்துருச்சு. வா, ஜெகன்… போவோம்…”

உறுதியுடன் காதலன் கரம் பற்றி நடந்தாள் வெங்கடேஸ்வரி.

சீறிக்கொண்டு வந்த சரக்கு ரெயில் இவர்களை வாழ்த்திவிட்டுப் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *