செய்திகள்

காசிமேட்டில் சேதமடைந்த படகுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உறுதி

சென்னை, டிச.10–

வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையில் புயல் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சென்னை காசிமேட்டில் மீனவர்கள் நிறுத்திவைத்திருந்த படகுகள் கடும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படகுகள் சேதம் குறித்து ஆய்வு செய்து உரிய கணக்கெடுப்புக்குப் பின்னர் நிவாரணங்கள் உடனடியாக விடுவிக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அளித்தப் பேட்டியில், “மாண்டஸ் புயலால் மிகப் பெரிய பாதிப்புகள் இல்லாத அளவிற்கு தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாக தகவல் வந்துள்ளது. அதுபோல் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்த தகவல்களும கிடைத்துள்ளன. இவை முன்னுரிமை கொடுத்து சீரமைக்கப்படும். புயல் பாதிப்புப் பகுதிகளில் மொத்தமாக 205 மையங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டனர்.

நிவாரண முகாம்களுக்கு வருமாறு அழைத்தவுடன் மக்கள் தயக்கமின்றி வந்தனர். ஏனெனில் அந்த அளவுக்கு அரசு உணவு, மருத்துவம், கழிவறை என அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்துள்ளது. முகாம்களில் உள்ள 2 ஆயிரம் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

படகுகளுக்கு நிவாரணம்

சென்னை காசிமேட்டில் புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில் மூழ்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீனவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் 32 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். பைபர் படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் அவற்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுபோல் எந்திரப் படகுகளுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து 2, 3 நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன”.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *