சிறுகதை

காக்கா சுட்டவடை |சின்னஞ்சிறுகோபு

அந்த பூவரசம்பட்டி பள்ளி மாணவ மாணவிகள் சென்ற போது ஓட்டலில் கூட்டம் அதிகமில்லை.

அப்போது ஒருவர் ஏதோ விளம்பர நோட்டீஸைக் கொடுத்துக் கொண்டே சென்றார். அதைப் பார்த்ததும் ராமநாதன் ஓடோடிப்போய், “எனக்கு ஒரு நோட்டீஸ் கொடுங்கள்” என்று அந்த விளம்பர காகிதத்தை வாங்கிப் பார்த்தான்! அதுவோ ஆங்கிலத்தில் இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றாலும் அந்தக் காகிதத்தை மடித்து தனது பையில் பத்திரமாக வைத்துக் கொண்டான்!

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் உலகநாதன் ராமநாதனை, ‘இப்படி கண்டபடி தெருவில் ஓடக்கூடாது’ என்று கண்டித்தார்.

இவர்கள் சாப்பிட இருந்த ஓட்டலும் எதிரே தான் நடந்துப் போகும் தூரத்தில் தான் இருந்தது.

ஏற்கனவே அவர்களை எதிர்பார்த்திருந்த அந்த ஹோட்டலின் மேனேஜரும் அவர்களுக்கு ஹோட்டலின் ஒரு பகுதியில் தனியே இடம் ஒதுக்கி வைத்திருந்தார்.

“ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் முதலில் ஒரு பூரி செட்டும், ஒரு மசால்வடையும் கொடுங்கள். அதன் பிறகு யார் யாருக்கு இட்லி வேண்டுமோ, அவர்களுக்கு இட்லி கொடுக்கலாம்” என்று அந்த மேனேஜரிடம் சொன்னார் ஆசிரியர் உலகநாதன்.

ராமநாதன் உட்கார்ந்திருக்கிற இடத்திற்கு சுட சுட வந்தது பூரிசெட்! ராமநாதன் அந்த பூரியை தொட்டான். சூடாக ஆவிப்பறந்தபடி இருந்த அது, அவன் பூரியை தொட்டவுடன் ‘டபக்’கென்று ஓட்டையாகியது. அதோடு விரலையும் சுட்டது! பூரியின் அந்த ஓட்டையை நோக்கி வாயால் ஊதியபடி, அந்த பூரியை கையால் ஒரு தட்டு தட்டினான். அது ‘படா’ ரென்று பட்டாசு போல வெடித்தது!

ஹோட்டலிருந்த எல்லோரும் கொஞ்சம் அதிர்ந்து, ஆச்சரியத்துடன் ராமநாதனைப் பார்த்தார்கள். உலகநாதன் ஆசிரியரோ அவனை ஒரு முறை முறைத்தார். ராமநாதனோ கொஞ்சம் வெட்கத்துடன் நெளிந்தான்!

அப்போது ஒரு சர்வர் சிரித்துக்கொண்டே வந்து, மசால்வடைகள் வைத்திருந்த வாளியை அவனுக்கு பக்கத்தில் மேஜையின் மீது வைத்துவிட்டுப் போனார். ராமநாதன் அந்த வாளியை எட்டிப் பார்த்தான். அந்த வாளியில் நிறைய மசால்வடைகள் இருந்தன!

அந்தா பூவரசம்பட்டி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் ஹோட்டலில் காலை டிபனை முடித்துக்கொண்டு பெரிய கோவிலை நோக்கிச் சென்றார்கள்.

அப்போது ராமநாதன் தனது கால்சட்டைப் பையிலிருந்து, ஒரு காகிதத்தில் மடித்து வைத்திருந்த மசால்வடையை எடுத்து தேனப்பனிடம் காட்டினான்!

“ஐயோ…ஹோட்டலில் சுட்டவடையை நீ சுட்டிட்டியா?” என்றான் தேனப்பன்.

“ஆமாம்” என்றபடி வடையை கடிக்க வாய்க்கு அருகே கொண்டுப்போனான் ராமநாதன்.

அவ்வளவு நேரம் அருகிலிருந்த மரத்திலிருந்து, அதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு காக்கை பாய்ந்து பறந்து வந்து, வடையை மின்னல் வேகத்தில் அவனிடமிருந்து கொத்திக் கொண்டு பறந்தது!

ராமநாதன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று திகைத்து நிற்க, “நீ சுட்ட வடையை இப்போது காக்கா சுட்டுட்டுது!” என்று சொல்லி சிரித்தான் தேனப்பன்.

“திருட்டுக் காக்கையே!” என்று காக்கையை பார்த்து திட்டினான் ராமநாதன்.

தேனப்பனோ,

” திருட்டுக் காக்கை அதுவா? நீயா ?!” என்று சொல்லி சிரித்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *