விடிந்தால் முகூர்த்தம். மணமகள் கவிதாவைக் காணவில்லை!
மண்டபம் முழுக்க தேடியும் கவிதா கண்ணில் படவில்லை.
கவிதாவின் செல் வேறு சுவிட்ச் ஆப் என்று வந்தது.
பதட்டமானார் கவிதாவின் தந்தை ராகவன்.
விஷயத்தை கேள்விப்பட்ட மாப்பிள்ளையின் தந்தை ராகவனிடம் வந்து கோபமாக கத்தினார்.
” என்னய்யா நீ! ஒரு ஓடு காலியை பெத்து வச்சிருக்க. நல்ல குடும்பம்னு நெனச்சோமே… நாறடிச்சிட்டாளே..!”
திருப்பி பதில் பேச முடியாமல் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார் ராகவன்.
திருமணத்திற்கு வந்திருந்த சொந்தக்காரர்கள் ராகவனை பரிதாபமாக பார்த்தார்கள்.
மறுநாள் காலை மணி ஐந்து இருக்கும்.
மகள் கவிதாவிடமிருந்து ராகவனின் செல்லுக்கு வாட்ஸப் மூலம் ஒரு செய்தி வர, படித்துப்பார்த்தார்.
உடனே எரிச்சலோடு சம்பந்தியிடம் ஓடினார்.
” யோவ்! நான் ஒண்ணும் ஓடு காலியை பெத்து வைக்கல. கோஹினூர் வைரத்தைத்தான் பெத்திருக்கேன்.
இந்தாய்யா இதைப்பாரு புரியும்!” என்று தன் செல்போனை அவரிடம் நீட்டினார்.
வாங்கிப் பார்த்த சம்பந்தி அதிர்ந்தார். தலையில் அடித்துக்கொண்டார்.
அதில்…. டிராபிக் போலீஸ் வேலை பார்க்கும் தன் மகன் சபரி வாகன ஓட்டிகளிடம் கறாராக லஞ்சம் கேட்டு மிரட்டி வாங்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து ஒரு டீ கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டு தன் தொப்பியை திருப்பி தன் தொடை மீது வைத்து அதில் லஞ்சப்பணத்தை போட்டு அதிலிருந்து ஐம்பது, இருபது, பத்து, நூறு, இருநூறு என்று ஒரு பிச்சைக்காரன் போல் எண்ணிக்கொண்டிருக்கும் காட்சியும் வீடியோவாக ஓடிக்கொண்டிருந்தது.
இதை சபரியால் பாதிக்கப்பட்டவர் யாரோ ஒருவர் தான் இப்படி சுற்றி வளைத்து காட்சிகளை முழுமையாக எடுத்திருக்க வேண்டும்.
வீடியோவிற்கு கீழே….
‘ அப்பா, நேற்று இரவு தான் என் செல்லில் வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த வீடியோவை மண்டபத்தில் நான் இருக்கும் போது பார்த்தேன். என் தோழி தான் விஷயத்தை எனக்கு தெரியப்படுத்தினாள். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு இவர் பொருத்தமானவராக இல்லை. நீங்களோ நல்லாசிரியர் விருது வாங்கிய ஒரு ஆசிரியர். அதனால் தான் மாப்பிள்ளை சபரியை நிராகரிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். உடனே மண்டபத்தை விட்டு வெளியேறி நம் வீட்டுக்கு வந்து விட்டேன்.
இப்படிக்கு…
நம் வீட்டிலிருந்து உங்களின் அன்பு மகள் கவிதா ராகவன்’
என்று இருந்தது.
ராகவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தலைநிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார்.