சென்னை, மார்ச் 3–
கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 900 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 11,645 லிட்டர் கலப்பட டீசல் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 116 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 13.2.2023 முதல் 19.2.2023 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்து 819 மதிப்புள்ள 900 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 34 எரிவாயு உருளைகள், 70 கிலோ கோதுமை, கருப்பு ஆயில் மற்றும் கலப்பட டீசல் 11,645 லிட்டர் ஆகியவையும், இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 34 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 116 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 ன்கீழ் 1 நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.