சிறுகதை

கல் குவாரி | மலர்மதி

ன்று ஞாயிற்றுக்கிழமை.

பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் ஒன்றுகூடினர்.

“டேய்… இன்னைக்கு நாம பக்கத்து ஊர் கல்குவாரிக்குப் போகலாம்.” என்றான் ப்ரேம்.

“எதுக்குடா?” என்று கேட்டான் ராஜு.

“எதுக்கா? குளிக்கத்தான்.”

“ஓ… நான் மறந்தே விட்டேன். போகலாம்டா.” என்றான் ராஜு.

கல்குவாரி என்பது பாறைகள் வெட்டி எடுக்குமிடம். அதாவது தங்கச் சுரங்கம், நிலக்கரி சுரங்கம் போன்று கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்துக்குப் பெயர் கல்குவாரி.

பாறைகளை வெட்டி எடுத்தப் பிறகு ஆழமான பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்று ஒரு குளம் போல் காட்சியளிக்கும். அந்த தண்ணீரில்தான் சிலர் குதித்து நீச்சலடித்து மகிழ்வர்.

“எனக்கு நீச்சல் தெரியாது. அதனால் நான் வரமாட்டேன்.” என்று கழன்று கொண்டான் கோபி.

“ஆழம் தெரியாத இடங்களுக்கெல்லாம் போகக் கூடாதுடா. அப்புறம் விபரீதமாய் ஏதும் ஆகிடப்போகுது.” என்று கிரியும் ‘ஜகா’ வாங்கினான்.

“டேய்… சும்மா ஆளாளுக்கு எதையாவது சொல்லிக்கிட்டிருக்காதீங்கடா. பயந்தாங்கொள்ளிங்களெல்லாம் வரவேணாம். தைரியமா என்னோடு யார், யார் வரப் போறீங்கன்னு சொல்லுங்கடா?” என்றான் கடுப்புடன் ப்ரேம்.

கடைசியில் பிரேம், ராஜு, வசந்த், முருகேஷ் ஆகியோர் அடங்கிய நால்வர் குழு கல்குவாரிக்குப் போய் குளித்து வர தீர்மானித்தது.

பத்து கி.மீ. தூரத்தில் இருந்தது அந்த கல்குவாரி.

அனைவரும் சைக்கிள்களில் பறந்தனர்.

கல்குவாரியை அடைந்தவர்கள், சைக்கிள்களை மரத்தடியில் நிறுத்தி பூட்டிவிட்டு, நடந்தனர்.

பெரிய குளம்போன்று காட்சியளித்த அந்த இடம் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பி இருந்தது.

ஆடைகளைக் களைந்து வெறும் ஜட்டியுடன் முதலில் பிரேம் தண்ணீருக்குள் இறங்க, அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தனர்.

வெயிலுக்கு இதமாய், தண்ணீர் ‘ஜில்’லென்று இருந்தது.

ஆனந்தமாய்க் குளிக்க ஆரம்பித்தனர்.

சுரங்கப் பாதை போன்று தெரிந்த இடத்தை நோக்கி பிரேம் நீந்தினான்.

“டேய் அங்கே போகாதே. அந்த இடத்துல ஆழம் எவ்வளவு இருக்கும்னு தெரியாது.” என எச்சரித்தான் ராஜு.

“நீ ஒரு பயந்தாங்கொள்ளி.” என்றவன் அனாவசியமாய் நீந்தி அந்த இடத்தை அடைந்தான் பிரேம்.

திரும்பி குரல் கொடுத்தான்.

“டேய்… எல்லோரும் இங்கே வாங்கடா. இந்த இடம் ரொம்ப கூலா இருக்கு.”

அவன் சொன்னதைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் அந்த இடத்தை அடைந்தனர்.

ஜாலியாய் நீந்திக்கொண்டிருந்தவர்கள் இன்னும் சிறிது தூரம் போக எதுவோ அவர்களை உள்ளே இழுப்பதுபோன்று இருந்தது.

என்ன, ஏது என்று உணர்வதற்குள் ஒவ்வொருவராக உள்ளிழுக்கப்பட்டனர்.

குளிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய நான்கு பேரைக் காணவில்லை என்று அவர்கள் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க, நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அந்த கல்குவாரியை அடைந்து தேடினர்.

அவர்கள் விட்டுப்போன சைக்கிள்களும் ஆடைகள் மட்டுமே கிடைத்தன. அவர்கள் பற்றிய எந்த தகவலோ தடயமோ கிடைக்கவில்லை.

உடனே, போலீசார், அரக்கோனத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாட பறந்து வந்தது அந்தக் குழு.

தண்ணீருக்குள் தேடி, பாறை இடுக்குகளில் சிக்கியிருந்த அந்த நான்கு மாணவர்களின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கிராம மக்கள் கூடிவிட்டனர்.

மாணவர்களின் பெற்றோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத காட்சி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பேரிடர் மீட்புக் குழு அதிகாரி அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கிப் பேசினார்.

“நாங்களும் எவ்வளவோ அறிவிப்புகளும், எச்சரிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டுத்தான் இருக்கிறோம். அப்படியிருந்தும் அதே தவறை தொடர்ந்து செய்யறீங்க. பாதுகாப்பற்ற இதுபோன்ற நீர் நிலைகளில் குளிக்கக்கூடாது என்றும், ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்ட இடங்களில் குழந்தைகளை கவனக் குறைவாக விடாதீர்கள் என்று எத்தனை முறை நாங்கள் எச்சரித்தும் அதே தவறைச் செய்துவிட்டு இப்படி தலையில் அடித்துக்கொண்டு அழுது என்ன பிரயோஜனம்? போன உயிர் திரும்ப கிடைக்குமா? ஓர் உயிர் என்பது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் தங்கள் குழந்தைகளை கண்டித்து ஆபத்தான இடங்களுக்கு அனுப்ப வேண்டாம். தயவு செய்து உங்களையெல்லாம் கெஞ்சிக் கேட்டுக்கறோம். இனிமேலாவது ஜாக்கிரதையாய் இருங்கள்.”

தங்கள் குழந்தைகளை இனிமேல் சர்வ ஜாக்கிரதையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் கலைந்துச் சென்றனர் பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *